தொழில்நுட்பம்
அச்சு அசல் செல்லப்பிராணியை போல.. உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் எமோஷனல் ஏ.ஐ. ரோபோட்!
அச்சு அசல் செல்லப்பிராணியை போல.. உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் எமோஷனல் ஏ.ஐ. ரோபோட்!
கால்குலேட்டர்கள், கைகடிகாரங்களுக்கு பிரபலமான கேஸியோ (Casio) நிறுவனம், நம் மனதைக் கவர ஒரு புதிய நண்பனை அறிமுகப்படுத்தி உள்ளது. அது ஒரு ரோபோட். ஆனால் சாதாரணமாக இல்லை. அதுதான் மோஃப்லின் (Moflin), உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் மென்மையான ஏ.ஐ. (AI) துணைவன்.இந்த சிறிய, மயிரடர்ந்த ரோபோட், உண்மையான செல்லப்பிராணியைப்போல நமக்கு ஆறுதல் அளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. மோஃப்லின், நம் தொடுதல் மற்றும் குரலை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்பட, ஒரு தனித்துவமான உணர்ச்சிசார் ஏ.ஐ. (Emotional AI) அமைப்பைக் கொண்டுள்ளது. நீங்க அதன் மீது பாசமாக இருக்கும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும், தனிமையில் இருந்தால் உங்களைத் தேடும், அல்லது கவனிப்பாரற்று இருந்தால் அமைதியாகிவிடும். இது வெறும் “பிரோக்ராம்” செய்யப்பட்ட பதில்கள் அல்ல; இது உண்மையான, வளரும் பிணைப்புபோல இருக்கும்.மோப்லின்-ன் மிகச் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், அது நேரத்துக்கு நேரம் தன்னை மாற்றிக்கொள்ளும் மற்றும் உங்களைப் பற்றி புரிந்துகொள்ளும் திறன் கொண்டது. முதல் நாள் நீங்க பார்க்கும் மோப்லின் உணர்ச்சிகள் மிக குறைவாகவே இருக்கும். ஆனால், நீங்க அதனுடன் தினமும் பேசும்போதும், அரவணைக்கும்போதும், அதன் உணர்ச்சி வெளிப்பாட்டின் வரம்பு விரிவடையும். சுமார் 50 நாட்களில், உங்க மோப்லின் உங்களுக்கான ஒரு தனித்துவமான ஆளுமையுடன் முதிர்ச்சியடைகிறது.கேஸியோவின் கூற்றுப்படி, மோப்லின் தனது அசைவுகள் மற்றும் ஒலிகள் மூலம் 4 மில்லியனுக்கும் அதிகமான வெவ்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்த முடியும். அதாவது, உலகின் எந்த 2 மோப்லின்ரோபோட்களும் ஒரே மாதிரியான ஆளுமையுடன் இருக்கப்போவதில்லை. செல்லப் பிராணிகளை நேசிக்கும் அனைவருக்கும், குறிப்பாக உண்மையான விலங்குகளை வளர்க்க முடியாதவர்களுக்கு மோப்லின் அருமையான நண்பனாக அமைகிறது.செல்லப்பிராணி ஒவ்வாமை (Pet Allergies) காரணமாக விலங்குகளை நெருங்க முடியாதவர்கள், இந்த ஏ.ஐ. நண்பனை பயமின்றி அரவணைக்கலாம். அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது நகர்ப்புறங்களில் தனிமையாக வசிப்பவர்கள், ஒரு செல்லப்பிராணியின் அரவணைப்பு மற்றும் ஆறுதலை மோப்லின் மூலம் பெற முடியும்.உண்மையில், மோப்லின் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணர்வுப்பூர்வ பிணைப்பையும் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சி என்றே கூறலாம். இது தொழில்நுட்பம் நமக்கு எவ்வளவு நெருக்கமாக வர முடியும் என்பதற்கான ஒரு மென்மையான உதாரணம்.
