பொழுதுபோக்கு
அஜித்துடன் காதல் கிசுகிசு… பட ப்ரொமோஷனுக்கான வேலை அது: உண்மையை உடைத்த ஆரம்ப கால நாயகி
அஜித்துடன் காதல் கிசுகிசு… பட ப்ரொமோஷனுக்கான வேலை அது: உண்மையை உடைத்த ஆரம்ப கால நாயகி
தமிழ் சினிமாவில் 90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுவாதி. கடந்த 1995-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘தேவா’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து, அஜித் நடித்த ‘வான்மதி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமும் அவருக்கு வெற்றியை தந்தது.தொடர்ந்து, ‘வசந்த வாசல்’, ‘செல்வா’, ’நாட்டுப்புற நாயகன்’, ‘சொக்கத் தங்கம்’, ‘யோகி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘சொக்க தங்கம்’ திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்திற்கு தங்கையாக நடித்து சுவாதி அசத்தியிருப்பார். நடிகை சுவாதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். ‘வானத்தைப்போல’ படத்தின் கன்னட ரீமேக்கில் கௌசல்யா நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, சினிமாவிற்கு இடைவெளி விட்ட நடிகை சுவாதி அதன்பின்னர் தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சுவாதி 90 காலக்கட்டத்தில் தான் அஜித்தை காதலிப்பதாக பரவிய செய்தி குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ”படம் பப்ளிசிட்டிக்காக நான் அஜித்தை காதலிப்பதாக செய்திகளை பரப்பினார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் ஹைதராபாத்தில் இருந்து வந்து 45 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். சினிமாவிற்கு வந்துவிட்டோம் சாதிக்க வேண்டும் என்று தான் நானும் நடிகர் அஜித்தும் நினைத்தோம். அதன் பிறகு, ஒரு குறிப்பிட்ட வயது வரை நடிக்க வேண்டும் அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு என் குடும்பத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். நான் என்ன நினைத்தேனோ அதை தான் நான் சாதித்தேன்.கல்வி என்பது நமக்கு முக்கியம், என் கல்வியை முடித்தேன். நான் சென்னைக்கு குடும்பம் அமைப்பதற்காக வரவில்லை, நடிப்பிற்காக வந்தேன். அந்த நடிப்பை நன்றாக செய்துவிட்டு எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது குடும்ப வாழ்க்கையை தொடங்கினேன். நானும் அஜித்தும் காதலிப்பதாக சொன்னது வெறும் வதந்தி தான். நான் சினிமாவிற்கு வருவதற்கு நடிகை செளந்தர்யா தான் காரணம். விஜயகாந்த் நடித்த ‘சொக்க தங்கம்’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது அதில், தான் ஒரு நடிகை இருக்கிறார்களே என்று கேட்டேன். அதற்கு, ஒரு மிக்கியமான கதாபாத்திரம் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு சொன்னார்கள். அதன்பின்னர் எனக்கு பிடித்த நடிகை செளந்தர்யா இருந்ததால் அந்த படத்தில் நடிக்க சரி என்று சொன்னேன்.பிரேமலதா விஜயகாந்த் தான் என்னை எங்கோ பார்த்துவிட்டு ‘சொக்க தங்கம்’ படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் பாக்கியராஜிடம் சொல்லியிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நானும் நடிகை செளந்தர்யாவும் ஒன்றாக இருந்து சாப்பிட்டிருக்கிறோம். நடிகர் விஜய் படத்தில் தான் நான் முதலில் நடித்தேன். அவரது கடைசி படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்” என்றார்.
