இந்தியா
ஆர்.எஸ்.எஸ்-ன் பின்னணி தெரியாமல் வாழ்த்து; சந்தர்ப்பவாத அரசியல்: ரங்கசாமியை சாடிய நாராயணசாமி
ஆர்.எஸ்.எஸ்-ன் பின்னணி தெரியாமல் வாழ்த்து; சந்தர்ப்பவாத அரசியல்: ரங்கசாமியை சாடிய நாராயணசாமி
ஆர்.எஸ்.எஸ்-இன் பின்னணி தெரியாமல் 100-வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து கூறி முதலமைச்சர் ரங்கசாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதுச்சேரியில் குப்பை அள்ளும் நிறுவனம் சரியான முறையில் குப்பையை அகற்றவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் சொல்கிறார். இதை செய்வதற்கு அவருக்கு திராணி உள்ளதா அப்படி என்றால் குப்பை வாரும் நிறுவனத்திடம் இருந்து பெற்ற லஞ்சப் பணத்தை முதலமைச்சர் திரும்ப வழங்க வேண்டும். அதனை அவர் கொடுப்பாரா? ரங்கசாமி சாதனை முதலமைச்சர் அல்ல, அவர் அறிவிப்பு முதலமைச்சர். மேடையில் பேசி விட்டு சென்று விடுவார். ஆனால் ஒன்று நடக்காது. மிரட்டல் விடுத்தால் மட்டும் போதாது. நடைமுறைப்படுத்த வேண்டும் புதுச்சேரி மக்கள் வரி பணத்தை சுரண்டி கொள்ளை அடிக்கிறார்கள். சிவாஜி சிலையிலிருந்து இந்திரா காந்தி சிலை வரை மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது, ராஜீவ் காந்தி சிலை முதல் இந்திராகாந்தி வரை பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வருகிறார். அப்படி என்றால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?ஆர்.எஸ்.எஸ் -ன் நூறாவது ஆண்டு விழாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றி இருவர்களுக்கு என்ன தெரியும்? சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி நேரு தலைமையில் போராட்டங்கள் நடந்த போது வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம். இந்துக்கள் நாடு தான் இந்தியா என சொல்வதை ரங்கசாமி ஏற்றுக் கொள்கிறாரா?நாட்டின் அமைதியை சீர்குலைக்கின்ற இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. எதற்காக வாழ்த்து சொல்கிறோம் என்று தெரியாமல், ஆர்.எஸ்.எஸ்-ஸின் பின்னணி தெரியாமல் வாழ்த்து சொல்கிறார். ரங்கசாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது” என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
