இலங்கை
செம்மணிப் புதைகுழி மூன்றாம்கட்ட அகழ்வுக்கு நிதி விரைவில் விடுவிப்பு; அமைச்சர் ஹர்ஷன உறுதி!
செம்மணிப் புதைகுழி மூன்றாம்கட்ட அகழ்வுக்கு நிதி விரைவில் விடுவிப்பு; அமைச்சர் ஹர்ஷன உறுதி!
அரியாலை -செம்மணிப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதியை வழங்கும் பட்சத்தில். எதிர்வரும் 21ஆம் திகதி பணிகளை ஆரம்பிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் உத்தேசத் திகதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், இன்றளவும் நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே, தொடர்ச்சியான அகழ்வுப்பணிகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையிலேயே. நிதி விடுவிப்பு விரைவில் இடம்பெறும் என்று அமைச்சர் ஹர்ஷன கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி எமது அமைச்சிடம் உள்ளது. இந்தப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தும் இடம்பெற்று வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழியை மூன்றாம் கட்டமாக அகழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான நிதிவிடுவிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. உரிய நடைமுறைகளை விரைவில் முழுமைப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது- என்றார்.
