இந்தியா
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்: அக்.13-ல் அடிக்கல் நாட்டும் நிதின் கட்கரி
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்: அக்.13-ல் அடிக்கல் நாட்டும் நிதின் கட்கரி
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி சிலை சதுக்கம் வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நேரில் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அந்த பகுதியை கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே இந்த 2 சதுக்கங்களையும் இணைத்து மேம்பாலம் கட்ட புதுவை அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் 100 சதவீத நிதியை பெற திட்ட வரையறை அனுப்பியது. இதனையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வு செய்தனர். இதன் பிறகு, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.8 கி.மீ., தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 100 சதவீத நிதி உதவியாக ரூ.436.18 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்த மேம்பாலம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 13-ம் தேதி நடக்கிறது. விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்க உள்ளார். விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன், புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து, விழா நடைபெறும் இடமான தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடம் மற்றும் பாலம் அமையும் இடங்களை பார்வையிட்டனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பன்னீர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். மேம்பால கட்டுமான பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, 30 மாதங்களில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.இந்த மேம்பாலம் இந்திரா காந்தி சதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் தொடங்கி, ராஜீவ் காந்தி சதுக்கத்தில் இருந்து 620 மீட்டர் வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் இறங்குகிறது. இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ்காந்தி சதுக்கம் வரை 1,140 மீட்டர் நீளம் மற்றும் 20.5 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இந்திரா காந்தி சதுக்கத்தில் 17 மீட்டர் உள்வட்டமும் மற்றும் 11 மீட்டர் அகலத்திற்கு உயர்நிலை வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
