இந்தியா
போலீஸ் துப்பாக்கிச்சூடு, 3 பேர் மரணம்; உலககோப்பையை விட மருத்துவம் முக்கியம்: மொராக்கோ இளைஞர்கள் போராட்டம் தீவிரம்
போலீஸ் துப்பாக்கிச்சூடு, 3 பேர் மரணம்; உலககோப்பையை விட மருத்துவம் முக்கியம்: மொராக்கோ இளைஞர்கள் போராட்டம் தீவிரம்
மொராக்கோவில் நடைபெற்று வரும் இளைஞர்கள் போராட்டம் 6-வது நாளாக நேற்றும் (அக்டோபர் 2) தொடர்ந்த நிலையில், முந்தைய இரவு காவல்துறையினர் தாக்கியதில் 3 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி, வன்முறை குறித்த அச்சம் இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.மொராக்கோவில், சிறந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கோரி, கசபிளாங்கா உட்பட 12 முக்கிய நகரங்களில் இளைஞர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் அஜிஸ் அகன்னூச் (Aziz Akhannouch) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. அதே சமயம், அமைதியான முறையில் நடந்த போராட்டங்கள் வன்முறைக் கலவரங்களாக மாறிய நிலையில், வங்கிகள் சூறையாடப்பட்டு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.இதனிடையே நேற்று முன்தினம் (அக்டோபர் 1) காவல்துறை தாக்குதலில் 3 பேர் மரணமடைந்ததாக வெளியாக தகவலை தொடர்ந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றது. மொராக்கோவின் மன்னரே நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் என்றாலும், அங்குள்ள போராட்டங்கள் பெரும்பாலும் அவரது உத்தரவுகளை செயல்படுத்தும் அரசாங்கத்தையே மையமாகக் கொண்டுள்ளன.நேற்று (அக்டோபர் 2)நூற்றுக்கணக்கானோர் மன்னர் ஆறாம் முகமது (King Mohammed VI) அரசாங்கத்திற்கு எதிராக தலையிட வேண்டும் என்று முழக்கமிட்டனர். போராட்டங்கள் அமைதியாக நடந்தபோது, கூட்டத்தினர் “மக்கள் பிரதமர் அகன்னூச்சைக் கவிழ்க்க விரும்புகிறார்கள்,” மற்றும் “அரசாங்கம் வெளியேறு!” என்று கோஷங்கள் எழுப்பினர்.இதனிடையே தமது முதல் பொது உரையில், போராட்டத்தில் நிகழ்ந்த மரணங்களுக்காக தாம் வருத்தப்படுவதாக தெரிவித்த பிரதமர் அகன்னூச், சட்ட அமலாக்கத் துறையின் ஒழுங்கை காப்பதற்காக முயற்சிகளைப் பாராட்டினார். அத்துடன், அரசாங்கம் போராட்டக்காரர்களுக்குச் சாதகமாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விவாதிக்கப்படும் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகத் தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைதான் நமது நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் கையாள்வதற்கான ஒரே வழி,” என்று அகன்னூச் கூறினார்.ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் பொதுக் கட்டிடங்களைத் தாக்கினர் என்று அதிகாரிகள் கூறிய அடுத்த நாள் போராட்டங்களைக் கையாள்வதற்கான புதிய முயற்சிகளுக்கான இந்த உறுதிமொழி வந்துள்ளது. இளைஞர்கள் தலைமையிலான இந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் அடங்கும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. நேற்று முன்தினம், கடலோர நகரமான அகாடிருக்கு வெளியே உள்ள சிறிய நகரமான லெக்லியாவில் (Leqliaa), பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.காவல்துறையின் ஆயுதங்களைப் பறிக்க முயன்றபோதுதான் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், இதை எந்தச் சாட்சிகளும் இந்த அறிக்கையை உறுதிப்படுத்தவில்லை. நாட்டின் 23 மாகாணங்களில் நூற்றுக்கணக்கான கார்கள், அத்துடன் வங்கிகள், கடைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களில் சுமார் 70% பேர் சிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.ஜென் இசட் 212 (genZ 212) என்று அறியப்படும் தலைவர் இல்லாத இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், அந்நாட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இவை, மொராக்கோவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வாரத்தின் நடுப்பகுதியில், அதிகாரிகளிடம் அனுமதி பெறாத போதிலும் இந்த போராட்டங்கள், புதிய இடங்களுக்கும் பரவுவது தெரிவந்தது.ஜென் இசட் ஆர்ப்பாட்டங்கள் என்று அழைக்கப்படும் இதில், பங்கேற்பவர்கள், சாதாரண மக்களின் இழப்பில் நடக்கும் பரவலான ஊழலைக் கண்டிக்கிறார்கள். முழக்கங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம், 2030 உலகக் கோப்பைக்கான ஆயத்தங்களை நோக்கிப் பில்லியன் கணக்கான முதலீடுகள் செல்வதையும், அதே சமயம் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிதி பற்றாக்குறையுடன் மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். முதலில் சுகாதாரப் பாதுகாப்பு, எங்களுக்கு உலகக் கோப்பை வேண்டாம் என்பது இந்த வாரத்தில் தெருக்களில் மிகவும் பிரபலமான முழக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் அல்லது புதுப்பிக்கப்பட்டு வரும் புதிய அரங்குகளை சுட்டிக்காட்டி, போராட்டக்காரர்கள், விளையாட்டு அரங்கங்கள் இங்கே உள்ளன, ஆனால் மருத்துவமனைகள் எங்கே?” என்று முழக்கமிட்டனர். அண்மையில் அகாடிர் பொது மருத்துவமனையில் எட்டுப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள், மொராக்கோவின் சுகாதார அமைப்பின் வீழ்ச்சிக்கு எதிரான போராட்டம் உருவாக காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
