இந்தியா
‘2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்காதீர்கள்’; சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
‘2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்காதீர்கள்’; சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் இறந்ததையடுத்து, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் (டி.ஜி.எச்.எஸ்), குழந்தைகளுக்கான இருமல் சிரப்புகளைப் பகுத்தறிந்து பயன்படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:என்று தனது சுற்றறிக்கையில் டி.ஜி.எச்.எஸ், “குழந்தைகளுக்கான இருமல் சிரப்களை விவேகத்துடன் பரிந்துரைத்து வழங்குமாறு” வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலான “குழந்தைகளுக்கான கடுமையான இருமல் நோய்கள் தானாகவே குணமாகக்கூடியவை (self-limiting) மற்றும் மருந்துத் தலையீடு இல்லாமல் சரியாகிவிடும்” என்று வாதிடுகிறது.மேலும், இருமல் மற்றும் சளி மருந்துகள் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படக் கூடாது என்று டி.ஜி.எச்.எஸ் அறிக்கை கூறுகிறது. “இவை பொதுவாக 5 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு மேற்பட்ட வயதினருக்குப் பயன்படுத்தப்பட்டால், அது கவனமான, மருத்துவ மதிப்பீடு, நெருக்கமான மேற்பார்வை மற்றும் பொருத்தமான அளவைக் கண்டிப்புடன் பின்பற்றுதல், மிகக் குறைந்த பயனுள்ள காலம் மற்றும் பல மருந்து கலவைகளைத் தவிர்ப்பது ஆகியவைத் தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று டி.ஜி.எச்.எஸ் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் மருந்துச் சீட்டை மட்டுமே கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் டி.ஜி.எச்.எஸ் வலியுறுத்தியது.சளி மற்றும் இருமலுடன் அவதிப்படும் குழந்தைகளுக்கு முதல்நிலை அணுகுமுறையாக, “போதுமான நீர்ச்சத்து மற்றும் ஓய்வு” போன்ற மருந்தில்லா நடவடிக்கைகளை டி.ஜி.எச்.எஸ் பரிந்துரைத்துள்ளது.இந்த மரணங்கள் போலி மருந்துகளால் ஏற்பட்டதாகச் சில தகவல்கள் வெளியானதால், அனைத்து சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களும் “நல்ல உற்பத்தி நடைமுறைகளின் கீழ் (good manufacturing practices) தயாரிக்கப்பட்ட மற்றும் மருந்தியல் தரமான துணைப் பொருட்களுடன் (pharmaceutical-grade excipients) உருவாக்கப்பட்ட தயாரிப்புகளைப் பெற்று வழங்குவதை” உறுதி செய்யுமாறு டி.ஜி.எச்.எஸ் வலியுறுத்தியுள்ளது.இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைகள், மாவட்ட சுகாதார அதிகாரிகள், அரசு மருந்தகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs), சமூக சுகாதார நிலையங்கள் (CHCs), மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கும் பொருந்தும்.இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள அனைத்துச் சாத்தியமான காரணங்களையும் விசாரிக்க, என்.சி.டி.சி (NCDC), என்.ஐ.வி (NIV), ஐ.சி.எம்.ஆர் (ICMR), நாக்பூர் எய்ம்ஸ் (AIIMS) மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்துறை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாசு மற்றும் போலி சிரப்கள் பற்றிய தகவல்கள் இருந்தபோதிலும், இதுவரை சோதனை செய்யப்பட்ட எந்த மாதிரிகளிலும் கடுமையான சிறுநீரகக் காயத்தை ஏற்படுத்தும் என அறியப்பட்ட டையெதிலீன் கிளைகால் (DEG) அல்லது எத்திலீன் கிளைகால் (EG) போன்ற மாசுபடுத்திகள் எதுவும் காணப்படவில்லை. மத்தியப் பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (எஸ்.எஃப்.டி.ஏ) மூன்று மாதிரிகளைச் சோதித்து டி.இ.ஜி மற்றும் இ.ஜி இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.மேலும், பொதுவான நோய்க்கிருமிகளைக் கண்டறிய என்.ஐ.வி புனே மூலம் ரத்த மற்றும் சி.எஸ்.எஃப் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில் ஒருவருக்கு லெப்டோஸ்பைரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மாசுபட்ட இருமல் சிரப் உட்கொண்டதால் ராஜஸ்தானில் இரண்டு குழந்தைகள் இறந்ததாக வெளியான அறிக்கைகள் குறித்து, கேள்விக்குள்ளான தயாரிப்பில், மாசுபடுவதற்கு சாத்தியமான மூலப்பொருளான புரோப்பிலீன் கிளைகால் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, குறிப்பிடப்பட்ட தயாரிப்பு ஒரு டெக்ஸ்ட்ரோமெதார்பன் (dextromethorphan) அடிப்படையிலான தயாரிப்பு ஆகும், இது குழந்தைகளுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படவில்லை.
