பொழுதுபோக்கு
இசை அமைப்பாளர் மகன், இளம் வயதில் மது பழக்கம்; அம்மாவுக்காக நடிக்க வந்து அசத்திய இந்த நடிகர் பன்முக திறமைசாலி!
இசை அமைப்பாளர் மகன், இளம் வயதில் மது பழக்கம்; அம்மாவுக்காக நடிக்க வந்து அசத்திய இந்த நடிகர் பன்முக திறமைசாலி!
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பானுசந்தர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1980-ஆம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘மூடுபனி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உளவியல் த்ரில்லரான இந்த படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து, ’சில்க் சில்க் சில்க்’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தீர்பு என் கையில்’, ‘வீடு’, ‘விசில்’, ’மச்சி’, ‘திமிரு’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். 1980-90 காலக்கட்டத்தில் நடிகர் பானு சந்தரை தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது. அதிலும், பெண்களுக்கு இவர் மீது தனி கிரேஸும் உண்டு.பிரபல இசையமைப்பாளராகத் திகழ்ந்த மாஸ்டர் வேணுவின் மகனான நடிகர் பானுசந்தர் தனது தாயின் காரணமாக சினிமாவில் நுழைந்தார். சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று பாலிவுட் சினிமாவில் உதவியாளராக இருந்தபோது இளம்வயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் பானுசந்தர். பின்னர், அவரை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க அவரின் தாய் தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அதன்பிறகே குடிப்பழக்கத்தைக் கைவிட்டுவிட்டு சென்னையில் கராத்தே பயின்று நடிகராக மாறினார் பானுசந்தர். தெலுங்கில் பல படங்கள் நடித்தாலும் தமிழ் திரைப்படம் மூலமாகவே பெரிதும் அறியப்பட்டார். நடிகர் பானுசந்தர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் ஜொலித்தார். ஹீரோவாக அவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவ குணச்சித்திர அவதாரம் எடுத்தார். ’தேவி, சிம்ஹாத்ரி’, ’ஸ்டைல்,’ ’துபாய் சீனு’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.தொடர்ந்து, தமிழில் ’ஏதோ செய்தாய் என்னை’, ’எட்டுத்திக்கும் மதயானை’, ’காஞ்சனா-2’, ’விளையாட்டு ஆரம்பம்’ உள்பட பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்களைக் கவர்ந்தார். இதுதவிர கே.பாலசந்தரின் மின் பிம்பங்கள் தயாரித்த ’எங்கிருந்தோ வந்தாள்’ நெடுந்தொடரில் கதாநாயகனாக மிக சிறப்பாக நடித்திருந்தார். இப்படி பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் பானு சந்தரின் மகனும் சினிமாவில் நடித்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?இவரது மகன் ஜெயந்த்-வும் கதாநாயகனாக படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான ‘நா கொடுக்கு பங்காரம்’ படத்தின் மூலம் ஜெயந்த் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பானு சந்தார் தான் இயக்கினார். ஆனால் சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகவில்லை. தொடர்ந்து, தமிழில் தன் மகன் ஜெயந்தை பானுசந்தர் அறிமுகப்படுத்தினார்.கடந்த 2011-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்டீபன் இயக்கத்தில் வெளியான ‘மார்கழி 16’ என்ற திரைப்படத்தில் ஜெயந்த் கதாநாயகனாக நடித்தார். ஆனால், இந்த படமும் தோல்வியடைந்தது. இதனால் விரக்தியடைந்த ஜெயந்த் அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
