இந்தியா
சுதேசி 2.0: பள்ளி மாணவர்களுக்குப் பாடம் மட்டுமல்ல… அரசு அலுவலகங்களிலும் ‘ஸோஹோ ஆபிஸ் சூட்’ மட்டுமே!
சுதேசி 2.0: பள்ளி மாணவர்களுக்குப் பாடம் மட்டுமல்ல… அரசு அலுவலகங்களிலும் ‘ஸோஹோ ஆபிஸ் சூட்’ மட்டுமே!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தகப் பதட்டங்கள், மாறிவரும் உலக அதிகாரச் சமநிலைகள் மற்றும் பருவநிலை மாற்ற கவலைகள் எனப் பல சவால்களுக்கு மத்தியில், இந்தியாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் நோக்கில் தற்சார்பு இந்தியா மற்றும் சுதேசி உணர்வை மாணவர்களிடையே விதைக்க மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. (NCERT) அமைப்பு புதிய சிறப்புப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலுவாக வலியுறுத்தி வரும் “உள்ளூருக்காகக் குரல் கொடுங்கள்” (Vocal for Local) என்ற முழக்கத்தையும், இந்தியப் பொருட்கள், இந்தியத் திறன்கள் மற்றும் இந்தியத் தொழில்களை நம்பி அவற்றைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தப் புதிய பாடத்திட்டங்கள் எடுத்துரைக்கின்றன.சுதேசியின் நவீன வடிவம்: ‘திறன் குறைதல்’ அபாயம் நீங்க தற்சார்பு அவசியம்என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள இந்தச் சுதேசி சிறப்புப் பாடத்திட்டங்கள், நடுநிலைப் பள்ளி (6 முதல் 8 ஆம் வகுப்பு) மற்றும் மேல்நிலைப் பள்ளி (9 முதல் 12 ஆம் வகுப்பு) மாணவர்களுக்கென இரண்டு தனித்தனிப் பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை வழக்கமான பாடப் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட, ஒரு குறிப்பிட்ட தலைப்பு குறித்த கூடுதல் அறிவை வழங்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன.இந்தத் திட்டத்திற்கான தொடக்கத்திலேயே, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் முக்கியக் குறிப்பு இடம்பெற்றுள்ளது: “தற்சார்பு என்பது வெறும் ஏற்றுமதி, இறக்குமதி, ரூபாய், பவுண்டு, டாலர் ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் அர்த்தம் மிகவும் ஆழமானது. தற்சார்பு என்பது நம்முடைய திறனுடன் (Capability) இணைந்தது. தற்சார்பு குறையத் தொடங்கும்போதெல்லாம், நம்முடைய திறனும் தொடர்ந்து குறைகிறது. எனவே, நம் திறனைக் காக்க, பேண, மேம்படுத்த, நாம் தற்சார்புடன் இருப்பது இன்றியமையாதது.”சுதேசி என்றால் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் பிறரையும் அவ்வாறு செய்ய ஊக்குவிப்பது மட்டுமல்ல. அது நம் மக்களின் சக்தி, படைப்பாற்றல், சிந்தனை மற்றும் புத்தாக்கத் திறன்கள் மீது நம்பிக்கை வைப்பதாகும் என்று இந்தப் பாடத்திட்டம் தெளிவுபடுத்துகிறது.சுதேசி இயக்கத்தின் வரலாறு முதல் இன்றைய வெற்றி வரை!1905-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் வங்காளத்தைப் பிரித்தபோது உருவான சுதேசி இயக்கத்தின் ஆழமான வேர்களை இந்தத் தொகுப்பு விளக்குகிறது. அன்று, வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு, புதிய இந்தியத் தொழில்கள் மூலம் உள்நாட்டு மாற்றுகள் உருவாக்கப்பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளிலும் இந்தச் சுதேசி உணர்வு பாய்ந்தது.மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், தீனதயாள் உபாத்தியாயா போன்ற தேசத் தலைவர்களின் சுதேசி குறித்த கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன. காந்தியைப் பொறுத்தவரை, உலகை நம்பாமல் வீட்டிலேயே ஒரு பலமான அடித்தளத்தை உருவாக்குவது சுதேசி. அதேபோல், ஜம்னாலால் பஜாஜ் (பஜாஜ் குழும நிறுவனர்) போன்றவர்கள், வணிகத்தில் சுதேசி மதிப்புகளைக் கடைப்பிடித்தது ஒரு ‘சுதேசி வெற்றிக் கதை’யாக மாணவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.சுதேசி இயக்கம் இந்தியர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாபெரும் பாடம், “பொருளாதார பலமே அரசியல் பலத்திற்கு அடிப்படை” என்பதாகும். உணவு, உடை, தொழில்நுட்பம் போன்ற விஷயங்களுக்கு ஒரு நாடு மற்றவர்களை முழுமையாகச் சார்ந்து இருந்தால், அது ஒருபோதும் உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியாது என்ற வரலாற்று உண்மை, இன்றும் செல்லுபடியாகும் என என்.சி.இ.ஆர்.டி வலியுறுத்துகிறது.உலகமயமாக்கல் சவால்களுக்கு சுதேசி 2.0 தான் பதில்!உலகமயமாக்கல் சந்தைகளை இணைத்து வாய்ப்புகளைக் கொடுத்திருந்தாலும், எண்ணெய் விலை உயர்வு, பெருந்தொற்று அல்லது வர்த்தகப் பிரச்சினைகள் போன்ற வெளிநாட்டு அதிர்ச்சிகளுக்கு நாடுகளை பலியாக்கி விடுகிறது. இந்தக் காலச்சூழலில், உலக வர்த்தகத்துக்கும் வலிமையான உள்ளூர் தொழில்களுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுதேசி நினைவுறுத்துகிறது.மாணவர்கள் இந்தியப் பொருட்களைத் தேர்வுசெய்வது எப்படி என்று இந்தப் பாடத்திட்டம் கூறுகிறது: இறக்குமதி செய்யப்பட்ட குளிர்பானங்களுக்குப் பதிலாக இந்தியப் பழச்சாறுகளைத் தேர்வு செய்வது, ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ பிராண்டுகளுக்குப் பதிலாக காதி அல்லது கைத்தறி ஆடைகளைப் பயன்படுத்துவது, இந்திய ஸ்டார்ட்-அப்கள் மற்றும் இந்தியச் செயலிகளை ஆதரிப்பது எனப் பல உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்தத் தற்சார்புக் கொள்கைதான், ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘உள்ளூருக்காகக் குரல் கொடுத்தல்’, ‘ஆத்மநிர்பர் பாரத்’, மற்றும் ‘உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் (PLI)’ போன்ற 2014-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய பல அரசுத் திட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது.கல்வி அமைச்சகத்தின் புதிய நடவடிக்கை:சுதேசி உணர்வை மேம்படுத்தும் நடவடிக்கையாக, கல்வி அமைச்சகம் ஒருபடி மேலே சென்றுள்ளது. அமைச்சகத்தின் அதிகாரிகள் இனிமேல், அதிகாரபூர்வமான டாக்யூமெண்ட்ஸ், ஸ்பிரெட்ஷீட் மற்றும் பிரெசண்டேஷன்ஸ் தயாரிப்புகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பான ‘Zoho Office Suite’-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு சூழலை உருவாக்குவதற்கான ‘சுதேசி இயக்கத்தின் துணிச்சலான ஒரு படி’ என்று கருதப்படுகிறது.சுதேசி 2.0 என்பது வெறும் பொருட்களை வாங்குவது அல்ல; உலக வர்த்தகப் போர்கள் மற்றும் காலநிலை கவலைகளால் சூழப்பட்ட உலகில், இந்தியா தனது சொந்த பலங்களை நம்பி, கௌரவம், நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையுடன் வளர வேண்டும் என்ற பிரமாண்டமான லட்சியப் பயணமே! மாணவர்கள் இந்தச் சுதேசி உணர்வைக் கடைப்பிடித்து, தேசத்தைக் கட்டமைக்கும் தூண்களாக மாற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்கு.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
