இந்தியா
எமனாக மாறிய இருமல் மருந்து – சிறுநீரக செயலிழப்பால் ம.பி -யில் 10 குழந்தைகள் மரணம்!
எமனாக மாறிய இருமல் மருந்து – சிறுநீரக செயலிழப்பால் ம.பி -யில் 10 குழந்தைகள் மரணம்!
மத்தியப் பிரதேசத்தின் பாராசியா (Parasia) பகுதியில் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட பல குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்தது. ஆரம்பத்தில், அதிகாரிகள் குழப்பமடைந்த நிலையில், விசாரணையின் முடிவில், உயிரைப் பறித்த விஷம் இருமல் மருந்தில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.செப்டம்பர் 2ஆம் தேதி சிவம் (4) என்ற குழந்தையின் மரணத்துடன் இந்த துயர சம்பவம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வித்தி (3) செப். 5, அத்னான் (5) செப். 7, உசைத் (4) செப். 13, ரிஷிகா (5) செப். 15, மற்றும் ஸ்ரேயா (2) செப். 16 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்தனர். சுமார் இரண்டு வாரங்களாக, contaminated நீர், எலிகள் மற்றும் கொசுக்கள் போன்ற வழக்கமான காரணிகளை சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்தனர், ஆனால் எந்தவொரு காரணமும் உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது, பெற்றோரின் சம்மதம் இல்லாததால் உடற்கூறு பரிசோதனை (Postmortem) நடத்தப்படவில்லை. இதனால், உண்மையான காரணம் அறியப்படாமல் இருந்தது. செப்டம்பர் 18ஆம் தேதி ஹிதான்ஷா (4) உயிரிழந்த பிறகு, நாக்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து கிடைத்த தகவல் இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது: குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் (Kidney Failure) இறந்துள்ளனர். அதே நாளில், விகாஸ் (5) என்ற மற்றொரு குழந்தையின் மரணம், விசாரணைக்கு முக்கிய உந்துசக்தியாக மாறியது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.முந்தைய தயக்கத்தைப் பொருட்படுத்தாமல், மருத்துவமனை அதிகாரிகள் விகாஸுக்குச் சிறுநீரக திசுப் பரிசோதனை (Renal Biopsy) செய்ய முடிவு செய்தனர். மூன்று குழந்தைகளின் திசுப் பரி பரிசோதனையில், சிறுநீரகத்தின் வடிகட்டும் அலகுகளான நெஃப்ரான்கள் (nephrons) சேதமடைந்திருப்பது தெரியவந்தது. பாராசியா துணை கோட்ட மாஜிஸ்திரேட் (SDM) விகாஸ் குமார் யாதவ் கூறுகையில், காம்பியாவில் நடந்ததைப் போல, “இருமல் மருந்து தொடர்பான மாசுபடுதல் குறித்து எங்களுக்கு சந்தேகம் வலுத்தது” என்றார்.இந்த மாதத் தொடக்கத்தில் சந்தியா (1) என்ற குழந்தையும், சனிக்கிழமை யோஜிதா (1.5) என்ற பத்தாவது குழந்தையும் நாக்பூரில் உயிரிழந்தனர். பல குழந்தைகள் சிகிச்சைக்காக நாக்பூர் அழைத்துச் செல்லப்பட்டதால், உள்ளூர் கண்காணிப்பு முறை பாதிக்கப்பட்டு, நிர்வாகத்தால் உடற்கூறு பரிசோதனை செய்ய முடியவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரமான விசாரணையைத் தொடர்ந்து, சனிக்கிழமை அன்று மத்தியப் பிரதேச அரசு ஒரு இருமல் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது.சென்னை, மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் (Drug Testing Laboratory, Chennai) நடத்தப்பட்ட சோதனையில், ஸ்ரீசன் பார்மசூட்டிகல் (Sresan Pharmaceutical) தயாரித்த கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) என்ற இருமல் மருந்தில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. இந்த மருந்தில் 48.6% எடை/அளவு (w/v) டயெதிலீன் கிளைகால் (Diethylene Glycol) என்ற நச்சுத் தொழில் வேதியியல் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த வேதிப்பொருள் “உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் நச்சுப் பொருள்” எனக் குறிப்பிடப்பட்டு, மருந்து “தரமற்றது” மற்றும் “கலப்படம் செய்யப்பட்டது” என அறிவிக்கப்பட்டது.ஜபல்பூர் மருந்து ஆய்வாளர் ஷரத் குமார் ஜெயின் அளித்துள்ள தகவலின்படி, கடாரியா பார்மசூட்டிகல்ஸ் (Kataria Pharmaceuticals) 660 புட்டிகள் மருந்தை சென்னையில் இருந்து வாங்கியுள்ளது. இதில் 594 புட்டிகள் சின்ட்வாராவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 66 புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.பாராசியா மேம்பாட்டுத் தொகுதியில் வசிக்கும் சுமார் 25,000 குழந்தைகளிடம் ஆஷா (ASHA) மற்றும் ஏஎன்எம் (ANM) ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாந்தி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்ட 4,658 குழந்தைகளில், 4,411 குழந்தைகளுக்குச் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சோதனைகள் முடிந்துவிட்டதாகவும், அனைத்தும் சாதாரணமாக உள்ளதாகவும் SDM யாதவ் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த துயர மரணங்கள், இராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்டதாகக் கூறப்படும் குறைந்தது நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களுடன் ஒத்திருக்கின்றன. இராஜஸ்தானில், டெக்ஸ்ட்ரோமெதார்பன் (Dextromethorphan) கொண்ட இருமல் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சர்ச்சையின் மையத்தில் உள்ள கேசன்ஸ் பார்மா (Kaysons Pharma) நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனைத்து 19 வகையான மருந்துகளின் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
