Connect with us

இந்தியா

4 1/2 ஆண்டுக்கு மேல் தொடரும் போராட்டம்… பணி நிரந்தரம் கோரி 8-வது கட்ட ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Published

on

pondicherry

Loading

4 1/2 ஆண்டுக்கு மேல் தொடரும் போராட்டம்… பணி நிரந்தரம் கோரி 8-வது கட்ட ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

புதுச்சேரி அரசை கண்டித்து 8  கட்ட போராட்டம் நடத்த போவதாக மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, அரசு ஊழியர் சம்மேலனம் சங்க செயலாளர் தமிழரசி தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 175 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, ஏறக்குறைய நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் அனைவரும் தகுதியும், திறமையும் மற்றும் ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள் பணி அனுபவமும் உள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கான பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில், அந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், புதிதாக 344 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 274 உதவியாளர் பணியிடங்களை பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில், ஒரு சிலர் தவிர்த்து பெரும்பாலான ஊழியர்கள், பனிரெண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக உள்ள நிலையில், அவர்களை காலியாக உள்ள பணியிடங்களில், பணி நிரந்தரம் செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.ஆனால் அதனை செய்ய முன்வராமல், துறையில் காலியாக உள்ள பணியிடங்களை புதிதாக பணி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுப்பதன் காரணமாக நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான முறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.எனவே துறை சார்பில் வெளியிடப்பட்ட பணி நியமன அறிவிப்பை திரும்ப பெற்று, நான்கரை ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ள காலி பணியிடங்களை மட்டும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று நிரந்தர அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, ஒர்க்கர் (344 பதவிகள்) பதவி உயர்வும், ஒர்க்கர்களுக்கு மேற்பார்வையாளர் ( 34 பதவிகள் ) பதவி உயர்வும் நீண்டகாலமாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது.பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்து பலமுறை கடிதம் அளித்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், நிரப்பப்படாமல் உள்ளது. இதன் காரணமாக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, பதவி உயர்வுக்கான தகுதி இருந்தும், காலத்தோடு பதவி உயர்வு வழங்காததன் காரணமாக அங்கன்வாடி உதவியாளர்கள், கடுமையான மன உளைச்சலோடும், மன அழுத்தத்தோடும்பணியாற்றி வருகின்றனர். எனவே உடனடியாக தகுதி வாய்ந்த ஓர்க்கர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மற்றும் பெரும்பாலான தன்னாட்சி, சார்பு நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு, ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு விட்டது. அனைத்து ஊழியர்களும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வை பெற்றுவிட்ட நிலையில், விரைவில் எட்டாவது ஊதியக் குழுவும் அமைக்கப்பட உள்ளது. ஆனால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்தில் பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, இதுநாள் வரை ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப் படவில்லை. பொதுமக்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக அயராது பணியாற்றி வரும் மற்றும் அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியை திறம்படச் செய்து வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு  உடனடியாக ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்று அரசிடம் பலமுறை கோரிக்கையை முன்வைத்தும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.    எனவே புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்த, கடந்த 4/10/2025 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், அங்கன்வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள்: 10/10/2025 அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், 17/10/2025 அன்று திட்ட அலுவலகம் 1, வில்லியனூர், 22/10/2025  அன்று திட்ட அலுவலகம் 2, காரைக்கால், 24/10/2025 அன்று திட்ட அலுவலகம் 3, அரியாங்குப்பம், 27/10/2025 அன்று திட்ட அலுவலகம் 4, முத்தியால்பேட்டை, 30/10/2025 அன்று திட்ட அலுவலகம் 5, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, 6/11/2025 அன்று மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டு கழக அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம், 13/11/2025 அன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன