இந்தியா
சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் இ.டி. ரெய்டு
சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் இ.டி. ரெய்டு
சொகுசு கார் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான், மற்றும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று (அக்டோபர் 8) அமலாக்கத் துறையினர் (ED) சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.இந்தியா-பூடான் எல்லை வழியாக சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் ‘லேண்ட் க்ரூஸர்’, ‘டிஃபெண்டர்’, ‘மஸராட்டி’ போன்ற உயரக சொகுசு கார்கள் விவகாரத்தில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. எர்ணாகுளம் முதல் கோயம்புத்தூர் மற்றும் சென்னை வரை 17 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடக்கிறது.சோதனைக்கான முக்கிய காரணம்:கடந்த செப்டம்பர் 23 அன்று ‘ஆபரேஷன் நும்கோர்’ என்ற பெயரில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தி 37 சொகுசு கார்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றில், துல்கர் சல்மானுக்குச் சொந்தமான ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர்’ காரும் அடங்கும். இதுதொடர்பாக சுங்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத் துறை களமிறங்கியுள்ளது.சோதனை விவரங்கள்:துல்கர் சல்மானுக்குத் தொடர்புடைய இடங்களாக, சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை, அபிராமபுரத்தில் இருக்கும் அவரது இல்லம் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் துணை ராணுவப் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் தொழிலதிபர் அமித் சக்காலக்கல் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.முன்னதாக, பூட்டான் கார் கடத்தல் விவகாரத்தில் நடிகர் மம்மூட்டியின் கொச்சி பணம்பிள்ளி நகரில் உள்ள பழைய வீட்டிலும் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறையும் அங்கு சோதனை நடத்தி வருகிறது.திருச்சூர், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் போன்ற கேரள மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 17 இடங்களில் இந்தச் சோதனைகள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் நடைபெற்று வருவதாக கொச்சி மண்டல அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் விஜேஷ் வர்கீஸ் மற்றும் வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் டீலர்களுடைய வீடுகளிலும் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.தமது காரைப் பறிமுதல் செய்ததை எதிர்த்து துல்கர் சல்மான் நேற்றுதான் (அக்டோபர் 7) கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். விசாரணையின்போது, “ஆவணங்களைச் சோதனையிட எதற்காக காரைப் பறிமுதல் செய்ய வேண்டும்? வலுவான ஆதாரம் என்ன இருக்கிறது?” என்று நீதிபதி சுங்கத்துறைக்குக் கேள்வி எழுப்பியிருந்த சூழலில், தற்போது அமலாக்கத் துறை இந்த விசாரணையைத் தொடங்கி உள்ளது.ராணுவ வீரர்கள் மற்றும் தூதரகப் பணியாளர்களின் பெயரில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ‘லேண்ட் க்ரூஸர்’, ‘மஸராட்டி’ போன்ற உயரக கார்கள் கடத்தப்பட்டு, பணக்காரர்களுக்குக் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ஒரு பெரிய சதித்திட்டம் இதில் இருப்பதாகவும், அதன் பணப் பாதையைத் (Money Trail) கண்டறியவே இந்தச் சோதனை நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கேரளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சோதனை குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
