Connect with us

விளையாட்டு

டிரோன் பைலட் லைசன்ஸ்… புதிய அவதாரம் எடுத்த தோனி; குவியும் பாராட்டு!

Published

on

MS dhoni CSK

Loading

டிரோன் பைலட் லைசன்ஸ்… புதிய அவதாரம் எடுத்த தோனி; குவியும் பாராட்டு!

இந்திய கிரிக்கெட்டில் முப்பெரும் கோப்பைகளை வென்று, “தல” என ரசிகர்களால் கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி, தற்போது களத்தில் தனது ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மட்டுமின்றி, ஆகாயத்தில் டிரோன்களைப் பறக்கவிடும் புதியதொரு சாதனையைப் படைத்துள்ளார். ஆம்! ‘மஞ்சள் ஜெர்ஸி’யின் நாயகனான தோனி, தான் முதலீடு செய்து, விளம்பரத் தூதராக இருக்கும் நிறுவனம் நடத்தும் ஒரு பயிற்சி மையத்தில், டிரோன் பைலட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.சென்னையில் உள்ள, இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் (RPTO) தான் தோனி இந்த கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர் டிரோன் செயல்பாடுகள் குறித்து தியரி வகுப்புகள், சிமுலேட்டரில் தீவிர பயிற்சி மற்றும் உண்மையான டிரோன்களைப் பறக்கவிடும் செயல்முறை வகுப்புகள் என அனைத்தையும் முடித்து, தற்போது டிரோன் பைலட் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதன்மூலம், டிரோன்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கான சான்றிதழை அவர் பெற்றுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.தோனி முதலீடு செய்துள்ள அந்த நிறுவனம், ஒரு பறவையின் பெயரைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம், டிரோன் பயிற்சி மையங்களை நடத்தி வருவதுடன், முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 300-க்கும் மேற்பட்ட “திறன்மிகு மையங்களை” (Centres of Excellence) அமைத்துள்ளது. இதுவரை 2,500-க்கும் அதிகமான விமானிகளுக்கு பயிற்சி அளித்து சாதனை படைத்துள்ளது.சமீப காலமாக, இந்தியாவில் டிரோன் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. சட்டரீதியான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தரங்களுடன் டிரோன்களை இயக்குவதற்கு, திறன்வாய்ந்த மற்றும் சான்றளிக்கப்பட்ட பைலட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டே, தோனி சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துறையில் முதலீடு செய்தார்.தோனியின் இந்த ‘பறவை’ நிறுவனத்திற்கு மொத்தம் ஆறு டி.ஜி.சி.ஏ அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. மிக முக்கியமாக, டிரோன் உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்கும் DGCA-வின் இரட்டைச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் டிரோன் ஸ்டார்ட்அப் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. 25 கிலோவுக்கு குறைவான சிறிய வகை மற்றும் 25 கிலோவுக்கு அதிகமான நடுத்தர வகை என இரண்டு டிரோன் பிரிவுகளிலும் பைலட் பயிற்சி அளிக்க இந்நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனம் ₹100 கோடி நிதியையும் திரட்டியுள்ளது.மலிவான விலையில், துல்லியமான, நம்பகமான டிரோன் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளுக்கும் கொண்டு சேர்ப்பதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும், எதிர்கால டிரோன் பைலட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கே சான்றிதழ் அளிக்கும் “பயிற்சியாளருக்குப் பயிற்சி (Train the Trainer)” திட்டத்தையும் இந்நிறுவனம் சிறப்பாக நடத்துகிறது.தோனி ஒரு வெற்றிகரமான கேப்டன் மட்டுமல்ல, அவரது ஆட்டத்தைப் போலவே, எந்த ஒரு புதிய சவாலையும், துறையையும் முழு ஈடுபாட்டுடன் அணுகும் ஒரு தொழில்முனைவோரும் ஆவார் என்பதை இந்தச் செய்தி மீண்டும் நிரூபித்துள்ளது.  கிரிக்கெட் களத்தில் இருந்து இப்போது ஆகாயம் வரை தனது சிறகுகளை விரித்துள்ளார் ‘தல’ தோனி.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன