இந்தியா
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்; ஸ்டாலின் அறிவிப்பு
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்; ஸ்டாலின் அறிவிப்பு
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும், இந்திய மத்திய அரசின் நடவடிக்கை கோரியும் எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்றனர். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசு இதனைத் தடுக்க வேண்டும்.
எதிர்வரும் 14 ஆம் திகதி சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் இத்தீர்மானத்தை அனைத்துக் கட்சிகள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். காசாவில் தாக்குதல் கண்மூடித்தனமானது. பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் மனப்பூர்வ ஆதரவு அளிக்கும்.
மனித உயிர்களை காக்க வேண்டியது நமது கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்க வேண்டும். இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். உணவுப்பொருட்களுக்கு காத்திருந்தவர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர். இது என்னுடைய இதயத்தை நொருக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா?” என்றார்.
