இலங்கை
சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று (10) பொலிஸ் அதிகாரி ஒருவரால் சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், எந்தவொரு நபருக்கு எதிராகவும் பொலிஸார் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், தான் அந்த சட்டத்தரணியை தாக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கான்ஸ்டபிள் அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை அளித்தால் அது தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
