பொழுதுபோக்கு
நீங்க ஹீரோ ஆனது திறமையா? லக்கா? பிரதீப்க்கு வந்த கேள்வி: தெலுங்கில் பதில் சொன்ன சரத்குமார்!
நீங்க ஹீரோ ஆனது திறமையா? லக்கா? பிரதீப்க்கு வந்த கேள்வி: தெலுங்கில் பதில் சொன்ன சரத்குமார்!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் பிரதீப் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கியிருந்தார்.ஒரு யுவக்களுக்கே உரித்தான காதல் மற்றும் நகைச்சுவை படமாக இது இருந்தது. ஒரு படத்தை இயக்கி அடுத்த படத்தில் நடிகராக அறிமுகமாகி அந்த இரண்டு படங்களையும் மெகா ஹிட்டாக்குவது என்பது குறைவானவர்களுக்கே சாத்தியமான ஒரு சாதனை. இதுவரை எந்தக் கோலிவுட் ஹீரோவுக்கும் இது சாத்தியமாகாத ஒன்றாக இருந்த நிலையில், பிரதீப் அதனை எளிதாக கடந்துவிட்டார்.‘லவ் டுடே’ படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் நடித்த அடுத்த படம் ‘டிராகன்’. இந்தப் படத்தை ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் இயக்குநராக அறியப்படும் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். 2025-ம் ஆண்டு வெளியான ‘டிராகன்’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் செய்தியாளர் ஒருவர் நீங்க திறமையினால் ஹீரோவானீர்களா? இல்லை லக்கால் ஹீரோவானீர்களா? என்று கேட்டார். இதற்கு பிரதீப் பதிலளிக்க முயன்றபோது நடிகர் சரத்குமார் மைக்கை வாங்கி பேசியதாவது, “ரொம்ப சாரி பிரதீர் உங்களிடம் இருந்து மைக்கை வாங்கியதற்கு. நான் சினிமா துறையில் 170 படங்கள் நடித்துள்ளேன். நீங்கள் யாரையாவது ஹீரோ மெட்டீரியல் என்று கூற முடியுமா? எல்லாருமே ஹீரோ தான். ஹீரோவிற்கு என்று எந்த வரைமுறையும் இல்லை. சமூகத்திற்கு நன்மை பயக்கும் செயலில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்களோ அவர்கள் எல்லோருமே ஹீரோ தான்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரதீப், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
