விளையாட்டு
மகளிர் உலககோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ரன் குவிப்பு
மகளிர் உலககோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ரன் குவிப்பு
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: மகளிர் கிரிக்கெட் போட்டியில் 13-வது உலககோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்துகின்றன. கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கிய இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் விளையாடி வருகிறது.இந்த தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன், அலைசா ஹேர்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு, ப்ரதிகா ராவல் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மந்தனா, அரைசதம் கடந்து அசத்திய நிலையில், ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களைப் பூர்த்தி செய்த முதல் பெண் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.தற்போதுவரை 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்துள்ளது. மந்தனா, 56 ரன்களுடனும், ராவல் 47 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் அடைந்த தோல்வியின் தாக்கத்தில் இருந்து மீளாத நிலையில், இந்திய அணிக்கு பரம எதிரியான ஆஸ்திரேலியாவை விசாகப்பட்டினத்தில் எதிர்கொள்வது கடினமான சவாலாக அமைந்தது.ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி, தங்கள் டாப் ஆர்டரின் தடுமாற்றத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தொடர்ச்சியாகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய நிலையில், இந்த போட்டியில் அதை சரி செய்தது போல் தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும், தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சரிவைச் சந்தித்தது இந்திய டாப் ஆர்டர். அந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் போராடும் குணத்துடன் விளையாடி சேர்த்த 94 ரன்கள்தான் அணியை காப்பாற்றினாலும் வெற்றி கிட்டவில்லை.
