இந்தியா
முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்: தீபாவளி டிக்கெட் ‘புக்’ செய்ய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி
முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்: தீபாவளி டிக்கெட் ‘புக்’ செய்ய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி
திங்கட்கிழமை தீபாவளி வருவதால், அதனுடன் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் இணைந்து நீண்ட வார விடுமுறையாக மாறியுள்ளது. இதனால், பெரு நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் இன்றில் இருந்தே (வெள்ளி) தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், இந்தியாவின் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான தளமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) இணையதளமும், அதன் செயலியும் திடீரென முடங்கின. இதனால் பல பயணிகள் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர்.உச்சக்கட்ட நேரத்தில் முடங்கிய சேவைஇந்தச் சிக்கல், பலர் தட்கல் அல்லது உடனடி முன்பதிவுச் சேவைகளை பயன்படுத்த முயற்சிக்கும் முக்கிய நேரத்தில் ஏற்பட்டது. உள்ளூர் செய்தி அறிக்கைகளின்படி, அவசர முன்பதிவுகளுக்காக அதிகப் பயணிகள் ஒரே நேரத்தில் தளத்திற்கு வந்தபோது, சரியாக அந்த நேரத்தில் சேவைகள் முடங்கின. Downdetector.in போன்ற தளங்களும் ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் ஏற்பட்ட பெரிய கோளாறை உறுதி செய்தன.6,000-க்கும் மேற்பட்ட புகார்கள்ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) வெப்சைட் முடங்கியதைக் கண்காணிக்கும் இணையதளப் புகார்களைப் பதிவு செய்யும் டவுண்டெக்டர் (Downdetector) தளத்தில், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேல் 6,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாயின. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை பயன்படுத்த முயன்றபோது, இந்த வெப்சைட் கோரிக்கைகளுக்குத் தற்காலிகமாகச் சேவை செய்ய முடியவில்லை. எரர் குறியீடு (Error code): 119 என்ற செய்தி மட்டுமே பயணிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. இணையதளம் மட்டுமின்றி, ஆஃப் (App) தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பழுதுகள் (Glitches) இருப்பதாகப் பயணிகள் புகாரளித்தனர்.சமூக ஊடகங்களில் கொந்தளிப்புபண்டிகைக் கால நெருக்கடியான நேரத்தில் இணையதளம் முடங்கியதால், ஆத்திரமடைந்த பயணிகள் சமூக ஊடகங்களான ‘X’ தளத்தில் தங்கள் புகார்களைப் பதிவு செய்தனர். சர்வர் பிழைகள் காரணமாகத் தங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும், பயணத் திட்டங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். ரயில்வே நிர்வாகம் இந்தச் சிக்கலுக்கு விரைவில் பதிலளிக்க வேண்டும் என்றும், உடனடியாகச் சேவையைச் சரிசெய்ய வேண்டும் என்றும் பயனர்கள் கோரிக்கை வைத்தனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், முக்கிய நாட்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தொடரும் சிக்கலும் மாற்று வழிகளும்பண்டிகைக் காலங்கள் அல்லது தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், அதிகப் பளு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி தளம் முடங்குவது அல்லது வேகம் குறைவது இது முதல் முறையல்ல. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் பயணிகள், இயல்பு நிலை திரும்பும் வரை, நேரடியாக முன்பதிவுக் கவுண்டர்களை அணுகுதல், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களைப் பயன்படுத்துதல் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி-யின் சேவை மீட்பு அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
