பொழுதுபோக்கு
‘எதுக்கு பயப்படணும்? என் ரத்தம் என் ஜீவன்’… அரசியல் களத்தில் விஜய்யின் துணிச்சலைப் பாராட்டி எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு!
‘எதுக்கு பயப்படணும்? என் ரத்தம் என் ஜீவன்’… அரசியல் களத்தில் விஜய்யின் துணிச்சலைப் பாராட்டி எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு!
கடந்த பிப்ரவரி 2024-ல் நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் மாநாடுகள், பரந்தூர் மக்கள், சிவகங்கை லாக்கப் டெத் விவகாரங்களுக்காகப் போராட்டங்கள் எனத் தீவிரமாகச் செயல்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் அவர் மேற்கொண்ட மாநில அளவிலான சுற்றுப்பயணத்தின்போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற DeSIFMA (De Sales International Film & Media Academy) பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:”சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தைக் கண்டிப்பாக உங்க படத்தில் சொல்லுங்கள். சினிமாவைப் போன்ற ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் (Powerஃபுல் மீடியா) வேறு கிடையாது.அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், தனது கடந்தகால அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “நான் எந்தக் கட்சியும் கிடையாது. இப்போது நான் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்). இரண்டு வருடத்துக்கு முன்பு வரைக்கும் நான் எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனால், அண்ணா, பெரியார், கலைஞரைப் பிடிக்கும்.1987-ம் ஆண்டு கலைஞர் (கருணாநிதி) கைது செய்யப்பட்டபோது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. 3வது நாள், ‘கலைஞரின் நீதிக்கு தண்டனை’ என்று நானே விளம்பரம் கொடுத்தேன். அப்போது எம்.ஜி.ஆர். அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்தார். ஆனால், ஒரு தவறு நடக்கிறது என்றால், அதை எதிர்க்க என்னிடம் இருந்த ஆயுதத்தை நான் பயன்படுத்தினேன். ஒருமுறைதான் பிறக்கிறோம், ஒருமுறை சாகப்போகிறோம். இதற்கிடையில், எதற்குத் தினமும் பயந்து வாழ வேண்டும்? என் ரத்தம், என் ஜீன்தான் இப்போ…” என்று கூறி, தனது மகன் விஜய்யின் துணிச்சலான அரசியல் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.
