இலங்கை
இஷாராவுடன் தொடர்பு; வடக்கில் நால்வர் கைது!
இஷாராவுடன் தொடர்பு; வடக்கில் நால்வர் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இஷாரா செவ்வந்தி தேடப்பட்டுவந்த நிலையில், அவர் தலைமறைவாகியிருந்தார். அண்மையில் இவர் நேபாளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்.
அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அவருடன் தொடர்புகளைப் பேணிய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலும் தலைமறைவாகியிருந்தார் என்று கூறப்படும் நிலையில், அது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஷரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
