இந்தியா
புதுச்சேரியில் புதிய விமான சேவை தொடக்கம்; நகரம், நேரம் உள்ளிட்ட முழு விபரம் இங்கே
புதுச்சேரியில் புதிய விமான சேவை தொடக்கம்; நகரம், நேரம் உள்ளிட்ட முழு விபரம் இங்கே
ஐதராபாத், பெங்களூருவை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு இன்று (அக்டோபர் 26) முதல் விமான சேவை தொடங்குகிறது.புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இண்டிகோ நிறுவனத்தின் மூலம் 80 பேர் பயணம் செய்யும் விமானம் ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த நிலையில் புதுவையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாமுக்கு விமான சேவை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சேவை அனைத்து நாட்களிலும் இருக்கும்.இதையொட்டி புதுச்சேரிக்கு வந்து செல்லும் விமான நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தினந்தோறும் காலை 10.05 மணிக்கு ராஜமுந்திரியில் இருந்து புறப்படும் விமானம் காலை 11.20மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அங்கிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.45க்கு புதுச்சேரி வந்தடையும். பிற்பகல் 2.05 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு பெங்களுரு சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மாலை 5.40 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அங்கிருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு ராஜமுந்திரி செல்லும். இத்தகவலை புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
