இலங்கை
மட்டக்களப்பை புரட்டிப் போட்ட மினி சூறாவளி!
மட்டக்களப்பை புரட்டிப் போட்ட மினி சூறாவளி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்ததுடன், மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்தும் மின்சார விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர் நகர், ஏறாவூர்ப்பற்று, போரதீவுப்பற்று உள்ளிட்ட சில செயலகப் பிரிவுகளில் அதிகளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரையம்பதியில் வீசிய மினி சூறாவளியால், மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு அருகிலிருந்த மைதான ஸ்ரேடியம் காற்றால் தள்ளப்பட்டு வாகன தரிப்பு நிலையத்தின் மீது விழுந்து சேதமடைந்துள்ளது. மேலும், பல வீடுகள் சேதமடைந்ததுடன் மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் புதூர், சேத்துக்குடா பகுதிகளிலும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் தும்பாலைச்சோலை, மைலம்பாவெளி, சிவபுரம் பகுதிகளிலும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய வானிலையின் படி 19.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் சேத விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் புத்தளம் மாவட்டத்திலும் 149 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 கிராம சேவகர் பிரிவுகளில் 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
