Connect with us

இந்தியா

தனியார் பங்களிப்புடன் இ-பஸ் சேவை: புதுச்சேரி அரசே ஏற்று நடத்த எதிர்க் கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

Published

on

Puducherry Opposition leader DMK convenor R Siva stress on Olectra Electric Bus Smart City Initiative Tamil News

Loading

தனியார் பங்களிப்புடன் இ-பஸ் சேவை: புதுச்சேரி அரசே ஏற்று நடத்த எதிர்க் கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மின்சார பேருந்துகள் இயக்கத்தை கைவிட்டு புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் ஏற்று நடத்திட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சிவா அரசை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – புதுச்சேரி அரசு நிறுவனமான சாலைப் போக்குவரத்துக் கழகம் சிறப்பாகவும், பொதுமக்கள் போற்றும்படியும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களின் போக்குவரத்துக் கழகங்களோடு ஒப்பிடுகின்ற போது, அதில் முதன்மை இடம் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு தான் உண்டு. இக்கழகத்தைச் சேர்ந்த பேருந்துகள் எப்போது வரும் என்று பயணிகள் காத்திருந்து பயணிக்கும் நிலையில் இந்த கழகத்தின் சேவை அமைந்துள்ளது. இப்படிப்பட்ட நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரி அரசு முதன் முறையாக புதுச்சேரி நகரப் பகுதியில் மின்சார பேருந்து சேவையை இன்று அறிமுகம் செய்து வைக்கிறது. காற்று மாசை கட்டுப்படுத்தவும், கார்பன்–டை–ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கச் செய்யும் நோக்கில் இந்த மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதை வரவேற்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் சிறந்த சேவையை முன்னெடுக்கும் சாலைப் போக்குவரத்துக் கழகத்தையும், அதன் ஊழியர்களையும் நம்பாமல் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை இதற்காக தேர்வு செய்து இருப்பதும், அவர்கள் மூலமாக மின்சார வாகனங்கள் இயக்கப்படுவது கண்டனத்துக்குரியதாகும். புதுச்சேரியின் நகரின் மையப் பகுதியில் மின்சார சார்ஜிங் சென்டர், பணிமனை இவைகளை எல்லாம் ஏற்படுத்தி 10 குளிர்சாதன பேருந்துகளையும், 15 சாதாரண மின்சார பேருந்துகளையும் ரூ. 40 கோடி செலவில் இறக்குமதி செய்து இவை அனைத்தையும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்பது ஏற்க முடியாதது. இந்த பேருந்துகளின் பணியாளர்கள் எல்லாம் தனியார் நிறுவனத்தால் அமர்த்தப்படுவதும், கட்டணங்களை அவர்களே வசூல் செய்வதும் புதுச்சேரி மக்களை பாதிக்கின்ற செயலாகும். புதுச்சேரியில் வேலையில்லாத இளைஞர்கள் தங்களுக்கு அரசு வேலை அளிக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் வேலையில் இது போன்ற பணிகளை கூட அவர்களுக்கு கிடைக்கச் செய்யாமல் அரசு தடுக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தற்போதைய அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியில் உள்ள தொழிலாளர்கள் சில மாதங்களுக்கு முன்பாக சம்பள பிரச்சனை, பணி நிரந்தரம் போன்றவைகளை முன்வைத்து போராடியதற்கு பழி தீர்க்கும் விதத்தில் மின்சார வாகனங்களை இயக்குவதற்கான வாய்ப்பை அவர்களிடமிருந்து தட்டிப்பறித்து தனியாரை வாழ வைக்கிறது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோத போக்கு ஆகும். பயண கட்டணத்தை பொறுத்தவரை பழைய கட்டணம் வசூலிக்கப்படுமா? அல்லது தனியார் விருப்பத்திற்கு அவர்களே உயர்த்தி வசூலிக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில்  அறிமுகப்படுத்தப்பட்ட தாழ்தள பேருந்துகளின் கட்டணங்களை மிக அதிகமாக வசூல் செய்ய ஒன்றிய அரசு கொடுத்த நிர்பந்தம் தான் புதுச்சேரியில் அனைத்துப் பேருந்துகளிலும் கட்டண உயர்வு ஏற்பட வழிவகுத்தது. அதுபோல், இந்த மின்சார பேருந்துகளை தனியார் பங்களிப்புடன் இறக்குமதி செய்து, கட்டணத்தை உயர்த்தி, அதனை அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தும் அவலம் எதிர்காலத்தில் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஒன்றிய அரசினுடைய நோக்கம் தாங்கள் நிறைவேற்ற துடிக்கும் எந்த திட்டத்தையும் யூனியன் பிரதேசங்கள் மீது சோதனைக்களமாக திணித்து வருவது வழக்கம். இப்படித்தான் ரேஷன் கடைகளை மூட செய்தார்கள். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க செய்தார்கள். அதை பின்பற்றி தான் காரைக்கால் துறைமுகம் தனியாருக்கு விற்கப்பட்டது. ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள புதுச்சேரி மின்துறை அதானிக்கு வெறும் ரூ. 500 கோடி விற்பதற்கு பேரம் நடந்து கொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தான் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து இதன் முதன் முயற்சியாக மின்சார பேருந்து திட்டத்தில் தனியாருக்கு பங்களிக்கப்பட்டு உள்ளது. இவையெல்லாம் மக்கள் விரோத செயல்பாடு என்பது அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, மின்சார பேருந்து என்ற ஒரு மாயையை காட்டி தனியாரை நுழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கான முழு செலவையும் புதுச்சேரி அரசே ஏற்று புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்திடம் இப்பணியை ஒப்படைத்து மக்கள் சொத்தாக இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன