தொழில்நுட்பம்
3000 ஆண்டுகால மர்மம்: இத்தாலி ஏரிக்கு அடியில் பண்டைய கிராமம் கண்டுபிடிப்பு!
3000 ஆண்டுகால மர்மம்: இத்தாலி ஏரிக்கு அடியில் பண்டைய கிராமம் கண்டுபிடிப்பு!
அமைதியாக இருக்கும் இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள மெசானோ ஏரியின் (Lake Mezzano) அடியில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் உறங்கிக்கொண்டிருந்தது. நீருக்கடியில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், அந்த கால பயணத்தின் கதையைத் தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளனர்: அதுதான், வெண்கலக் காலத்தைச் சேர்ந்த ஒரு ‘மரக்கம்பக் கிராமம்’ (Stilt Village)! இந்த ஏரியின் ஆழத்தில், ஒரு காலத்தில் குடியிருப்பாக இருந்த 600-க்கும் மேற்பட்ட மரக் கம்பங்கள் இன்னும் நீரின் அடியில் நிற்கின்றன. இவை வெறும் மரத் துண்டுகள் அல்ல; ஒரு காலத்தில் ஏரியின் மீது மிதந்து கொண்டிருந்த ஒரு சமூகத்தின் அடித்தளங்கள் எனலாம்.கி.மு. 1700 முதல் 1150 வரையிலான காலகட்டத்தில், இத்தாலியின் வாலென்டானோ அருகே, மக்கள் ஏரியின் மேற்பரப்பில் சிக்கலான மரத் தளங்களை அமைத்து அதன் மீது வசித்துள்ளனர். இந்த நீருக்கடி தொல்லியல் ஆய்வாளர்கள், இதுவரை 600 கம்பங்களை வரைபடமாக்கி உள்ளனர். இந்தக் கம்பங்கள் 8 அடி முதல் 32 அடி வரை வெவ்வேறு ஆழங்களில் இருப்பதால், பல நூற்றாண்டுகளாக ஏரியின் நீர் மட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த ஏரி ஒரு பண்டைய எரிமலைப் பகுதியாக இருப்பதால், அங்கிருக்கும் அடர்ந்த களிமண், இந்த மரக்கம்ப அஸ்திவாரங்களை இத்தனை ஆண்டுகாலம் ‘இயற்கை நேரக் குடுவை’ போலச் சேதப்படுத்தாமல் பாதுகாத்துள்ளது.இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் வெண்கலப் பொருள்கள் தான் மிகவும் சுவாரசியமானவை. ஏரியின் அடிப்பகுதி களிமண்ணால் மூடப்பட்டு இருந்ததால், 25-க்கும் மேற்பட்ட வெண்கலப் பொருள்கள் ஆச்சரியப்படும் வகையில் சேதமின்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளன. விளிம்புகள் கொண்ட கோடாரிகள், ஈட்டி முனைகள், அரிவாள்கள், அழகிய ஆபரணங்கள் மற்றும் வெண்கல ஊசிகள் ஆகியவை இதில் அடங்கும். வெண்கல கட்டிகள் (Bronze Ingots) கண்டுபிடிக்கப்பட்டது, இந்தக் கிராமம் ஒரு அமைதியான குடியேற்றமாக இல்லாமல், வெண்கலப் பொருள்களை உற்பத்தி செய்து, வர்த்தகம் செய்யும் ஒரு சுறுசுறுப்பான மையமாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.ஆனால், இந்தக் கிராமம் ஏன் கைவிடப்பட்டது? ஆராய்ச்சியாளர்களை இதுவே பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நெருப்பின் அடையாளம்: இந்தக் வெண்கலப் பொருள்களில் பல தீயில் கருகியதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இடிபாடுகளில் எரிமலைக் கற்கள் சிதறிக் கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயங்கரமான தீ விபத்தினால் கிராமம் அழிந்ததா, அல்லது ஒரு மாபெரும் எரிமலை நிலச்சரிவால் அவசரத்தில் மக்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை, எரிமலை, வெள்ளம், தீ ஆகிய மூன்றும் சேர்ந்து இந்தக் கிராமத்தின் முடிவுக்குக் காரணமானதா என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.இத்தாலியின் நீருக்கடி தொல்லியல் ஆய்வுகளுக்கு ஒரு முக்கியத் தளமாக உருவாகியுள்ள மெசானோ ஏரி, வெண்கலக் கால மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பொறியியல் திறன்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்கு அவர்கள் எவ்வாறு பலியானார்கள் என்பதற்கான புதிய சாட்சியங்களை ஒவ்வொரு நாளும் அளித்துக் கொண்டிருக்கிறது.
