விளையாட்டு
ஆசிய கயிறு இழுக்கும் போட்டி: தங்கம் வென்று அசத்திய புதுச்சேரி வீரர்; ரங்கசாமி பாராட்டு
ஆசிய கயிறு இழுக்கும் போட்டி: தங்கம் வென்று அசத்திய புதுச்சேரி வீரர்; ரங்கசாமி பாராட்டு
கடந்த 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மலேசியா நாட்டில் ஆசிய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான கயிறு இழுக்கும் ( Tug- Of -War Asian Championships) போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 12 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளும் கலந்து கொண்டன. இதற்கான இந்திய அணி தேர்வு நான்கு கட்டமாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. இதில் நம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெங்கடேசன், அஜய், பிரசாந்த், குருபிரசாத் மற்றும் வீராங்கனை ஜெயக்குமாரி ஆகியோர் கலந்துகொண்டு இறுதியாக இந்திய அணியில் இடம் பெற்று புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.இதனிடையே மலேசியாவில் நடந்த ( Asian Tug-Of-War Championship 2025) போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டவற்களுக்கான பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கமும், 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இருபாலர் அணி வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தது. இந்த இரு அணிகளிலும் புதுவை வீரர் குருபிரசாத் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்து தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று இந்திய நாட்டிற்கும், புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர் குருபிரசாத் மற்றும் சக வீரர்கள் இன்று புதுவை மாநில கையிறு இழுக்கும் சங்கத்தின் தலைவரும், புதுவை மாநில எதிர்க்கட்சி தலைவருமான இரா. சிவா முன்னிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ந. ரங்கசாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி வீரர் குருபிரசாத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் தி.மு.க நிர்வாகிகள் வீரர் குருபிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
