தொழில்நுட்பம்
தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பு; இனி நம்பருடன் பெயரும் தெரியும்: புதிய வசதியை அறிமுகம் செய்யும் டிராய்!
தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பு; இனி நம்பருடன் பெயரும் தெரியும்: புதிய வசதியை அறிமுகம் செய்யும் டிராய்!
செல்போனிகளில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பவர் யார் என்று பெயர் (Caller Identification) வரும் வசதி இந்தியாவில் விரைவில், வர உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ட்ரூகாலர் (Truecaller) போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளைச் சார்ந்திருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த, தொலைத்தொடர்புத் துறை (DoT) விடுத்த பரிந்துரைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒப்புதல் அளித்துள்ளது.அழைப்புப் பெயர் அளித்தல் (Calling Name Presentation – CNAP) என்று அழைக்கப்படும் இந்தச் சேவை, உள்வரும் அழைப்புகளின் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், அழைப்பிற்குப் பதிலளிக்கும் முன் யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அழைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை முடிவுகளை எடுக்கவும் உதவும் நோக்கம் கொண்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ், சி.என்.ஏ.பி (CNAP) சிம் சரிபார்ப்பின் போது தொலைத்தொடர்பு ஆப்ரேட்டரிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் அழைப்பாளரின் பெயரைத் தானாகவே காண்பிக்கும்.இந்த முறையில், அடையாளத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சந்தாதாரர் தரவுத்தளத்தில் இருந்து நேரடியாகப் பெறப்படும். இது விவரங்கள் உண்மையானவை மற்றும் சரிபார்க்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும். அடிப்படையில், இது இந்தியாவின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் உள்ளிடடப்பட்ட அரசு ஆதரவு பெற்ற அழைப்பாளர் ஐடி (ID) அமைப்பாக செயல்படும்.சி.என்.ஏ.பி (CNAP) அம்சம் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் முன்னிருப்பாக செயல்படுத்தப்படும் என்று ட்ராய் (TRAI) தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பாத சந்தாதாரர்கள், தங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரை (TSP) தொடர்பு கொண்டு விலகிக் கொள்ளும் வசதி (opt out) அளிக்கப்படும். இந்த அணுகுமுறை தனியுரிமை மற்றும் வசதி இரண்டையும் உறுதி செய்கிறது. இது பயனர்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொடுப்பதுடன், அவர்களைச் சாத்தியமான மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது.அழைப்பாளர் பெயர் வெளிப்படுத்தப்படுவதன் மூலம், ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த சி.என்.ஏ.பி (CNAP) உதவும் என்று ட்ராய் (TRAI) ஒரு அறிக்கையில் விளக்கியுள்ளது. இந்த நடவடிக்கை அழைப்பைப் பெறுபவர், அழைப்பிற்குப் பதிலளிப்பதா இல்லையா என்பது குறித்து தகவலறிந்த தேர்வை எடுக்க அனுமதிக்கும்,” என்று ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இது டிஜிட்டல் தகவல்தொடர்பில் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் என்று கூறியுள்ளது.தற்போது, இந்தியத் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் அழைப்பு வரும்போது அழைப்பு வரி அடையாள எண்ணை (Calling Line Identification – CLI) மட்டுமே காண்பிக்கின்றன. அழைப்பாளரின் பெயரைக் காண்பிக்க வேண்டிய அவசியம் தற்போதுள்ள தொலைத்தொடர்பு உரிமங்களில் இல்லை. சி.என்.ஏ.பி (CNAP) இதை மாற்றுகிறது. இதன் மூலம் மூன்றாம் தரப்புச் செயலிகளின் தேவை இல்லாமல், ஸ்மார்ட்போன்கள் மற்றும் அடிப்படை ஃபோன்கள் இரண்டிலும் செயல்படும் ஒரு சீரான பெயர் அடையாளத் தரநிலையை உருவாக்குகிறது.இனிமேல் ஒவ்வொரு தொலைத்தொடர்பு ஆப்ரேட்டரும், ஒவ்வொரு சந்தாதாரரின் சரிபார்க்கப்பட்ட பெயரையும் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் இணைக்கும் ஒரு அழைப்புப் பெயர் (CNAM) தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்க வேண்டும். ஒருவர் அழைப்பைப் பெறும்போது, அந்தக் கையாளும் ஆப்ரேட்டர் இந்தத் தரவுத்தளத்தை குறுக்குச் சரிபார்ப்பு (cross-check) செய்து, அழைப்பைப் பெறுபவரின் சாதனத்தில் சரிபார்க்கப்பட்ட அழைப்பாளரின் பெயரைக் காண்பிக்கும். இந்த அமைப்பு தகவல்தொடர்பில் துல்லியத்தன்மை மற்றும் பொறுப்புணர்ச்சி இரண்டையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
