தொழில்நுட்பம்
200 வருடங்கள் நீடித்த மர்மம்: 1831-ல் வானில் தோன்றிய நீலச் சூரியன்! காரணம் கண்டறிந்த விஞ்ஞானிகள்!
200 வருடங்கள் நீடித்த மர்மம்: 1831-ல் வானில் தோன்றிய நீலச் சூரியன்! காரணம் கண்டறிந்த விஞ்ஞானிகள்!
2 நூற்றாண்டுகளாக நீடித்த ஒரு மர்மம் இறுதியாக விலகியுள்ளது! 1831-ம் ஆண்டு கோடையில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வானில் தோன்றிய விசித்திரமான நீலச் சூரியன், பயிர் சேதம், மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றம் ஆகியவற்றிற்கு என்ன காரணம் என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது விடையளித்துள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒரு “கோஸ்ட் வால்கனோ” (Ghost Volcano) எனப்படும், பதிவாகாத சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு இருந்திருக்கிறது.1831-ம் ஆண்டின் கோடை காலத்தில் வானம் ஒரு உலோக நிறத்துடன் காட்சியளித்தது. சூரியன் வழக்கத்திற்கு மாறாக நீல நிறமாக மாறியது. வெப்பநிலை உச்சத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் திடீரெனக் குறைந்தது. இவ்வளவு பெரிய காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த எரிமலை வெடிப்பும் அந்தக் காலகட்டத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை. சிசிலி கடலோரத்தில் சிறிது காலம் நீரின் மேலே தெரிந்த ஃபெர்டினாண்டியா (Ferdinandea) என்ற சிறிய எரிமலை மட்டுமே அறியப்பட்டிருந்தது. ஆனால், அதன் தாக்கம் இவ்வளவு பரவலாக இருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதினர்.ஆராய்ச்சியாளர்கள் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட பனிப் பாறை கூம்புகளை (Ice Cores) ஆய்வு செய்தனர். இவற்றில்தான் மறைந்த எரிமலை வெடிப்பின் “விரல் ரேகை” பதிந்திருந்தது. பனிக்கட்டியில் கந்தக ஐசோடோப்பு மற்றும் நுண்ணிய எரிமலை சாம்பல் (Cryptotephra) அதிக அளவில் இருந்ததைக் கண்டனர். இந்த சாம்பலின் வேதியியல் அமைப்பு, ரஷ்யாவின் குரில் தீவுகளில் உள்ள சிமுஷிர் தீவில் (Simushir Island) காணப்படும் ஒரு தடிமனான எரிமலைப் பாறை அடுக்குடன் சரியாக பொருந்தியது. இதுவே அந்த மர்ம எரிமலை வெடிப்பு, சிமுஷிர் தீவில் உள்ள Zavaritskii caldera பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான உறுதியான சான்றாக அமைந்தது.இந்த வெடிப்புக்கு Zav-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் தொலைதூரப் பகுதியில் நிகழ்ந்ததால், எந்த ஒரு வரலாற்று பதிவும் இல்லாமல் மறைந்து போனது. Zav-1 எரிமலை, சுமார் 12 ± 3.5 டெராகிராம் கந்தகத்தை வளிமண்டலத்தின் அடுக்குகளுக்குள் செலுத்தி உள்ளது. இந்த அளவு, 1991-ஆம் ஆண்டின் உலகளாவிய காலநிலையை மாற்றிய பினாத்துபோ எரிமலைக்கு (Mount Pinatubo) நிகரானது.இந்த கந்தகம் சூரிய ஒளியைத் தடுத்து, வட அரைக்கோளத்தில் வெப்பநிலையைச் சில ஆண்டுகளுக்கு 0.5–0.6°C வரை குறைத்து, பயிர்கள் சேதமடைய முக்கியக் காரணமாக இருந்துள்ளது. சிமுஷிர் தீவில் காணப்படும் 10 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட சாம்பல் அடுக்கு, இது ஒரு மிக மோசமான பிளினியன் (Plinian) வகை வெடிப்பு என்பதைக் காட்டுகிறது. புவியியல் சான்றுகள், தொல்பொருள் எச்சங்கள், மற்றும் மர வளைய டேட்டா அனைத்தும் இந்த வெடிப்பு 1831-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாக உறுதிப்படுத்துகின்றன.நீலச் சூரியனுக்கு வேறு காரணமா?ஆய்வின் சுவாரசியமான ஒரு திருப்பமாக, நீண்ட காலக் காலநிலை மாற்றத்துக்கு Zav-1 காரணமாக இருந்தாலும், குறுகிய காலத்திற்குச் சூரியன் நீலமாக, பச்சை அல்லது ஊதா நிறத்தில் காட்சியளித்த ஒளியியல் நிகழ்வுக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிசிலி கடலோரத்தில் நடந்த சிறிய ஃபெர்டினாண்டியா எரிமலை வெடிப்பு உருவாக்கிய தாழ்வான சாம்பல் மேகங்கள் (Tropospheric Plume), சூரிய ஒளியை பிழையாக சிதறடித்து, ஐரோப்பா முழுவதும் சில வாரங்களுக்கு அந்த அபூர்வமான வண்ணமயமான சூரியக் காட்சிகளை உருவாக்கியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது 1883 கிராக்கடோவா வெடிப்புக்குப் பின்னர் நடந்ததைப் போன்ற ஒரு நிகழ்வாகும். சக்திவாய்ந்த Zav-1 எரிமலையின் ரகசியத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன் பூமியின் வானத்தையும் காலநிலையையும் மாற்றியமைத்த ஒரு காலநிலை மர்மம் இறுதியாக விளக்கப்பட்டுள்ளது.
