தொழில்நுட்பம்
எதிர்கால நோய்களை கணிக்கும் ஏ.ஐ… 1,000-க்கும் மேற்பட்ட நோய்களைத் துல்லியமாகக் கண்டறியுமாம்!
எதிர்கால நோய்களை கணிக்கும் ஏ.ஐ… 1,000-க்கும் மேற்பட்ட நோய்களைத் துல்லியமாகக் கண்டறியுமாம்!
உங்க மருத்துவ வரலாற்றை வைத்து, உங்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் என்னென்ன நோய்கள் வரக்கூடும் என்று ஒரு வானிலை அறிக்கை போலத் துல்லியமாகச் சொல்ல முடியுமா? முடியும் என்கிறது ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல். டெல்ஃபி-2எம் (Delphi-2M) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சக்தி வாய்ந்த ஏ.ஐ. அமைப்பு 1,000-க்கும் மேற்பட்ட நோய்கள் ஒருவருக்கு வரும் அபாயத்தை, பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே முன்கணிக்கிறது.வழக்கமாக நாம் பயன்படுத்தும் சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகளை (LLMs) போலவே இதன் வடிவமைப்பும் உள்ளது. ஆனால், இது ஆங்கிலம் அல்லது தமிழ்ச் சொற்களைக் கையாளவில்லை. மாறாக, நோய்களைக் குறிக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ICD-10 குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லுக்குப் பிறகு என்ன சொல் வரும் என்று LLM கற்பது போல, ஒரு நோயாளிக்கு ஒரு நோய் வந்த பிறகு, அடுத்து எந்தெந்த நோய்கள் வரும் என்ற சுகாதார நிகழ்வுகளின் ‘இலக்கணத்தை’ டெல்ஃபி கற்றுக்கொள்கிறது.55 வயதான ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், இதேபோன்ற இலட்சக்கணக்கான வரலாறுகளுடன் ஒப்பிட்டு, இந்த வரிசைக்குப் பிறகு அடுத்ததாக எந்த நோய்கள் எப்போது வரக்கூடும் என்று இது கணிக்கிறது. டெல்ஃபி-2எம், ஒருவரின் மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி, அவருக்கு எதிர்காலச் சுகாதாரப் பிரச்னைகள் வருவதற்கான நிகழ்தகவை மட்டுமே மதிப்பிடுகிறது, மருத்துவ கண்டறிதலை அல்ல.இந்த மாடல் பிரிட்டனில் உள்ள 400,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் தரவுகளிலும், டென்மார்க்கில் உள்ள 1.9 மில்லியன் நோயாளிகளின் தரவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டது. ஆராய்ச்சி முடிவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1,000-க்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சராசரியாக 0.76 என்ற துல்லியத்தைக் கொண்டுள்ளது. இறப்பைக் கணிப்பதில் இதன் துல்லியம் 0.97 ஆக உள்ளது.பல அபாய மாதிரிகள் ஒரே ஒரு நோயை மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கணிக்கின்றன. ஆனால், டெல்ஃபி-2எம் ஒருவரின் ஒட்டுமொத்த சுகாதாரப் பயணத்தையே (Health Trajectory) மாதிரியாக்கி, நோய்கள் எப்போது, எந்த வரிசையில் வரும் என்று கணிக்கிறது. இதன் விளைவாக, ஒன்றுக்கு மேற்பட்ட உடல்நலப் பிரச்னைகள் உள்ள ஒருவருக்கு இந்த ஏ.ஐ, இதயத் தாக்குதலுக்கான வருடாந்திர அபாயத்தை 10,000-ல் 4 என்ற நிலையிலிருந்து 100-ல் 1 என்ற நிலைக்கு உயர்த்திக் கணிக்கிறது.சுகாதார அமைப்புகள் அதிக வயதான மக்கள்தொகை மற்றும் நாட்பட்ட நோய்களின் அழுத்தத்தால் திணறும் இக்காலத்தில், டெல்ஃபி-2எம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். அதிக ஆபத்தில் உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்க மருத்துவர்களுக்கு இது உதவும். ஒரு மக்கள் குழுவின் எதிர்கால சுகாதாரத் தேவைகளைக் கணித்து, வளங்களை மிகவும் திறமையாக ஒதுக்கீடு செய்ய அரசாங்கங்களுக்கு உதவலாம். தனிநபரின் தகவல்களைப் பாதுகாக்க, உண்மையான புள்ளிவிவர அமைப்புகளைக் கொண்ட முற்றிலும் செயற்கையான நோயாளித் தரவுகளை (Synthetic Patient Data) இது உருவாக்குகிறது. இவை மற்ற ஏ.ஐ. மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க உதவும். இந்த மாடல் பல ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கும் திறன் கொண்டிருந்தாலும், அதற்குச் சில வரம்புகள் உள்ளன. இது பயிற்சி அளிக்கப்பட்ட டேட்டாகளில் பெரும்பாலும் 40-69 வயதுடைய வெள்ளை இனத்தவர்களே அதிகம் இருந்தனர். இதனால், இது இளம் வயதினர் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்குச் சரியாகச் செயல்படாமல் போகலாம்.திடீரென ஏற்படும் தொற்று நோய்களைக் கணிப்பதில் இதன் திறன் குறைவாக உள்ளது. டெல்ஃபி-2எம் தற்போது மருத்துவப் பயன்பாட்டிற்கான தயாரிப்பு அல்ல. மேலும், தனிப்பட்ட தரவுகள் எதுவும் எல்லைகள் கடந்து பகிரப்படவில்லை, அனைத்தும் பாதுகாப்பான அரசு அமைப்புகளுக்குள் உள்ளேயே பகுப்பாய்வு செய்யப்பட்டன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த ஏ.ஐ-யைச் சரியான முறையில் பயன்படுத்தினால், இது பயங்கரமான நோய்களைக் கணிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கைக்காக மக்களைத் தயார்ப்படுத்தும் சக்திவாய்ந்த கருவியாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
