தொழில்நுட்பம்
சூரியக் குடும்பத்தின் ‘சூப்பர் ஹீரோ’: பூமி உருவாகக் காரணமாக இருந்த வியாழன்! புதிய ஆய்வில் தகவல்
சூரியக் குடும்பத்தின் ‘சூப்பர் ஹீரோ’: பூமி உருவாகக் காரணமாக இருந்த வியாழன்! புதிய ஆய்வில் தகவல்
சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன் (Jupiter), வெறுமனே பெரிய கிரகம் மட்டுமல்ல; நமது பூமி இந்தப் பிரபஞ்சத்தில் உருவாக முக்கியக் காரணமாக இருந்த “விண்வெளிச் சூப்பர் ஹீரோ” என்று ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு ஒன்று பிரமிக்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவாகத் தொடங்கியபோது, வியாழன் மிக வேகமாகப் பெரிதாகியது. அதன் அசுரத்தனமான ஈர்ப்பு விசை, உட்புறச் சூரியக் குடும்பத்தை (Inner Solar System) நோக்கிப் பாய்ந்து வந்த வாயு மற்றும் தூசியின் பிரம்மாண்ட ஓட்டத்தை அப்படியே தடுத்து நிறுத்தியது.இந்த வாயு மற்றும் தூசுக் கூட்டத்தில் இருந்துதான் பின்னாளில் நாம் வாழும் பூமி, செவ்வாய், வெள்ளி போன்ற பாறைக் கிரகங்கள் உருவாக வேண்டும். ஆனால், இந்த மூலப்பொருட்கள் அனைத்தும் சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து போயிருக்க அதிக வாய்ப்பிருந்தது. சரியாக அந்த நேரத்தில், வியாழன் தன் ஈர்ப்புச் சுவரை எழுப்பி, அந்தப் பொருட்களைச் சூரியனிடம் இருந்து காத்து, பூமி உருவாக வழி வகுத்தது.ஆய்வின் இணை-தலைவர் ஆண்ட்ரே இசிடோரோ கூறுகையில், “வியாழன் வெறும் மிகப்பெரிய கிரகமாக மாறவில்லை. அது முழு உட்புறச் சூரியக் குடும்பத்திற்கான கட்டிடக்கலையை (Architecture) அமைத்துக் கொடுத்தது. அது இல்லாவிட்டால், இன்று நாம் பார்க்கும் பூமி தோன்றியிருக்கவே முடியாது,” என்று தெரிவித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவிஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல்கள் மூலம் ஆராய்ந்தபோது, வியாழனின் செயல்பாடு எப்படி நடந்தது என்று தெரியவந்தது. வியாழனின் பிரம்மாண்ட ஈர்ப்பு விசை, சூரியனைச் சுற்றியிருந்த வாயு மற்றும் தூசுக் கோளத்தில் பெரிய அலைகளை உருவாக்கியது. இந்த அலைகள், அங்கே வந்த மூலப்பொருட்களைக் குழப்பி, ஒரு “விண்வெளிப் போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்தியது.வியாழன் தொடர்ந்து வளர்ந்தபோது, அந்தக் கோளத்தில் பெரிய இடைவெளியை உண்டாக்கி, சூரியக் குடும்பத்தை ‘உட்புற மண்டலம்’ மற்றும் ‘வெளிப்புற மண்டலம்’ என இரண்டாகப் பிரித்தது. இதனால் மூலப்பொருட்கள் சுதந்திரமாகப் பாய்வது நிரந்தரமாகத் தடுக்கப்பட்டது.ரைஸ் பல்கலைக்கழக மாணவர் பைபவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், இந்த மாதிரியானது விண்கற்களில் காணப்படும் தனித்துவமான இரட்டை ‘ஐசோடோபிக் கைரேகைகள்’ (Isotopic Fingerprints) ஏன் தோன்றின என்பதையும், கிரகங்கள் உருவாகும் முறையையும் முதன்முறையாக ஒத்துப் போக வைத்துள்ளது.மேலும், சூரியக் குடும்பத்தின் முதல் திடப்பொருட்கள் தோன்றிய பிறகு, சில விண்கற்கள் மட்டும் ஏன் 2 முதல் 3 மில்லியன் ஆண்டுகள் தாமதமாக உருவாயின என்ற நீண்டகால மர்ம முடிச்சையும் இந்த ஆய்வு அவிழ்த்துள்ளது. உட்புறச் சூரியக் குடும்பத்தில் பொருட்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம், வியாழன் இந்தத் தாமதமான பிறப்புக்குத் தேவையான தனித்துவமான சூழலை உருவாக்கியது. மொத்தத்தில், வியாழன் ஒரு மாபெரும் பாதுகாவலனாகச் செயல்பட்டுள்ளது. அதன் மண்டலப் பிரிப்பு இல்லையென்றால், நாம் இங்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே விண்வெளியின் அற்புதமான உண்மை.
