இலங்கை
பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு அரசியல்மயமாக மாறிவிட்டது; சாடுகின்றார் சஜித்!
பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு அரசியல்மயமாக மாறிவிட்டது; சாடுகின்றார் சஜித்!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றுமுழுதாக அவரது சிறப்புரிமைகளை மீறுபவையாக உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டிள்ளார். அவர் விடுத்துள்ள சிறப்பு அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில் உள்ளதாவது;
பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு மூலம் ஒருபிரஜை என்ற ரீதியில் ஜகத் விதானவின் சிறப்புரிமைகளும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவரது சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் அரசியல்மயமான வையாகவே காணப்படுகின்றன. சிலவிசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன.
உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஜகத் விதான, அவை தொடர்பாக முறைப்பாட்டாளராகச் செயற்படும்போது அவரைக் குற்றவாளியாக அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜகத் விதான சிறந்த மக்கள் சேவைகளை ஆற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராவார். அவரது பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்துவது நாட்டின் பாதுகாப்புத் தரப்புகளினது பொறுப்பாகும் – என்றுள்ளது.
