தொழில்நுட்பம்
வெறும் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு பயணம்… ரஷ்ய விஞ்ஞானிகளின் ‘பிளாஸ்மா’ ராக்கெட் தொழில்நுட்பம்!
வெறும் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு பயணம்… ரஷ்ய விஞ்ஞானிகளின் ‘பிளாஸ்மா’ ராக்கெட் தொழில்நுட்பம்!
மனிதகுலத்தின் மிக நீண்ட கனவு, விண்வெளியில் விரைவான பயணம் இப்போது நிஜமாகப் போகிறது வழக்கமாக 9 மாதங்கள் ஆகும் செவ்வாய்க் கிரகப் பயணத்தை வெறும் 30 நாட்களாகக் குறைக்கக்கூடிய புரட்சிகரமான பிளாஸ்மா ராக்கெட் இன்ஜினை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு, கிரகங்களுக்கிடையேயான பயணத்தின் எதிர்காலத்தை என்றென்றும் மாற்றியமைக்க உள்ளது.வழக்கமான வேதியியல் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திச் செவ்வாய்க்குச் செல்ல 6 முதல் 9 மாதங்கள் ஆகலாம். இந்தப் பயணத்தில் பல சிக்கல்கள் உள்ளன. விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் விண்வெளியில் இருக்க வேண்டியிருப்பதால், அவர்களின் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். விண்கலம் அதிக எரிபொருள், உணவு மற்றும் உபகரணங்களைச் சுமந்து செல்ல வேண்டும். இந்தச் சவால்களை சமாளிக்க, பயண நேரத்தைக் குறைப்பதே ஒரே வழி. அதற்குத்தான் இந்தப் பிளாஸ்மா தொழில்நுட்பம் விடையளிக்கிறது.பிளாஸ்மா ராக்கெட் வேலை செய்வது எப்படி?பாரம்பரிய ராக்கெட்டுகள்போல எரிபொருளை எரிப்பதற்குப் பதிலாக, இந்த புதிய இன்ஜின் முற்றிலும் மாறுபட்ட உத்தியைப் பயன்படுத்துகிறது. இது சூடான, மின்சாரம் ஏற்றப்பட்ட வாயுவான பிளாஸ்மாவை (ionized gas) பயன்படுத்துகிறது. இந்த பிளாஸ்மா மின்காந்த புலங்கள் மூலம் நம்பமுடியாத அளவிற்கு அதிக வேகத்தில் முடுக்குகிறது. இதுவே விண்கலத்தை உந்தித் தள்ளும் சக்தியை (Thrust) உருவாக்குகிறது.வேதியியல் ராக்கெட்டுகள் ஒரு ஆரம்ப வெடிப்பை மட்டும் கொடுத்து நிறுத்திக்கொள்ளும். ஆனால், பிளாஸ்மா இன்ஜின்கள் குறைவான, ஆனால் சீரான உந்துவிசையை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து வழங்க முடியும். இதனால் விண்கலம் படிப்படியாக அதிக வேகத்தைப் பெற்று, இலக்கை விரைவாக அடையும்.ரஷ்யாவின் விண்வெளி அமைப்புகள் நிறுவனம் (Institute of Space Systems) இந்த தொழில்நுட்பத்தின் மையத்தில் உள்ளது. அவர்கள் உருவாக்கி வரும் இந்த இன்ஜினை “பிளாஸ்மா இதயம்” (Plasma Heart) என்றழைக்கின்றனர். இந்த அதிநவீன இன்ஜின் சகாப்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஒரு சில வாரங்களில் (1 மாதம் அல்லது 2 மாதங்களில்) செவ்வாயை அடைந்தால், விண்வெளி வீரர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு வெகுவாகக் குறையும். மேலும், செவ்வாய்க் கிரகம் மற்றும் தொலைதூர விண்வெளிப் பொருட்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும்.
