தொழில்நுட்பம்
ஆண்டுக்கு 7 செ.மீ வேகத்தில் ஆசியா நோக்கி நகரும் ஆஸ்திரேலியா… புதிய கண்டம் உருவாகிறதா?
ஆண்டுக்கு 7 செ.மீ வேகத்தில் ஆசியா நோக்கி நகரும் ஆஸ்திரேலியா… புதிய கண்டம் உருவாகிறதா?
ஒரு காலத்தில் அண்டார்டிகாவுடன் ஒட்டி இருந்த ஆஸ்திரேலிய கண்டம், இப்போது மணிக்கு 7 செ.மீ. வேகத்தில் (விரல் நகத்தின் வளர்ச்சி வேகம்) வடக்கே நகர்ந்து, பெரிய நிலவியல் மோதலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் கண்ட நகர்வு மெதுவாக இருப்பதால் நமக்கு தெரிவதில்லை. ஆனால், நம்முடைய டிஜிட்டல் உலகமான ஜி.பி.எஸ். இதை ஏற்கெனவே உணர்ந்துவிட்டது.ஆஸ்திரேலியாவின் இந்தப் புவியியல் சாகசம், இப்போது ஆரம்பிக்கவில்லை. சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவில் இருந்து விடைபெற்ற ஆஸ்திரேலியா, இப்போது உலகின் அதிவேகமாக நகரும் நிலப்பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2016-ல் விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவின் சரியான இருப்பிடம் கிட்டத்தட்ட 2 மீட்டர் பிழையாக இருப்பதைக் கண்டறிந்தனர். காரணம் கண்டம் வெறுமனே நகர்ந்துவிட்டது. இந்தக் காரணத்திற்காகவே ஆஸ்திரேலியா தனது முழு தேசிய ஜி.பி.எஸ் கிரிட் அமைப்பையும் அவசரமாகப் புதுப்பிக்க வேண்டியிருந்தது.நாட்டின் இருப்பிடமே நகரும்போது, வாகனங்கள், விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கிய அமைப்புகள் துல்லியமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் கோஆர்டினேட்ஸ் (Coordinates) நாம் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்! புவியியல் உண்மைக்கு நம்முடைய டிஜிட்டல் உலகம் எவ்வளவு உணர்திறன் கொண்டது என்பதற்கு இது ஒரு சான்று. நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய மோதலின் சிறு அறிகுறியை இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளில் உணர முடிகிறது.இந்தக் கண்டநகர்வால் எழும் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான உயிரினங்களுக்கு என்ன ஆகும்? என்பது தான்கங்காரு, வாலோபி, பிளாட்டிபஸ் போன்ற ஆஸ்திரேலியாவின் வினோதமான மார்சுபியல் பாலூட்டிகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாகத் தனியாக ஒரு குமிழில் பரிணாமம் அடைந்தவை. ஆசிய நிலப்பரப்புடன் ஆஸ்திரேலியா இணையும்போது, ஆசியப் பாலூட்டிகள் உள்நுழைந்து, போட்டி போடும்போது கோலா போன்ற சுமாரான தட்பவெப்பத்தை மட்டும் நம்பியிருக்கும் உள்ளூர் இனங்கள் அழிவைச் சந்திக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.300 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வடக்கே சென்று, வட அமெரிக்கா மேற்கே நகர்ந்து, பசிபிக் பெருங்கடல் மூடும்போது, அடுத்த பேரரயக் கண்டம் உருவாகும். அதற்குப் புவியியலாளர்கள் இட்டுள்ள பெயர்: “அமாசியா” (Amasia). இந்த மாற்றம் நிகழும்போது, நிலத்தின் மையப் பகுதிகள் கடுமையான வெப்பத்துடனும், வறட்சியுடனும், எரிமலைச் செயல்பாடுகளுடனும் மாறும். கடல் நீரோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் காலநிலை ஆகியவை முற்றிலும் மாறிவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
