தொழில்நுட்பம்
வெளிக் கிரக கோளின் 3D போட்டோ வெளியீடு: விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்!
வெளிக் கிரக கோளின் 3D போட்டோ வெளியீடு: விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்!
இதுவரை விண்வெளியில் இருப்பதாக மட்டுமே அறிந்திருந்த வேற்றுக்கிரக உலகங்களின் புவியியலை, நாம் இப்போது கையில் வைத்து பார்க்க முடியும். ஆம்! நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கோளை, விஞ்ஞானிகள் முதன்முறையாக முப்பரிமாணத்தில் (3D) வரைபடமாக்கி, அந்தக் கோளின் வளிமண்டலத்தில் நடக்கும் ஆச்சரியமூட்டும் ரகசியங்களை உடைத்துள்ளனர். நேச்சர் அஸ்ட்ரானமி (Nature Astronomy) இதழில் (அக்.28) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் எனப்படுகிறது.விஞ்ஞானிகள் மேரிலாந்து மற்றும் கார்னெல் பல்கலைக் கழகங்களில் உருவாக்கிய இந்தக் கோள், WASP-18b ஆகும். இது நம்மிடமிருந்து சுமார் 400 ஒளியாண்டுகள் தொலைவில் சுற்றுகிறது. இந்தக் கோள், வெறும் 23 மணி நேரத்தில் தன் நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வந்துவிடுகிறது. இது வியாழனை விட 10 மடங்கு அதிக எடை கொண்டது. இதன் பகல் பக்கத்தில் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,000 டிகிரி பாரன்ஹீட் (2,760°C) வரை எட்டுகிறது. இவ்வளவு தீவிரமான சூழல் நிலவும் இந்த கோளில்தான், விஞ்ஞானிகள் தங்கள் 3D எக்லிப்ஸ் மேப்பிங் (3D Eclipse Mapping) என்ற புதிய முறையைச் சோதித்தனர்.கண்ணால் பார்க்க முடியாத அளவு பிரகாசமான நட்சத்திரத்தின் அருகே சுற்றும் WASP-18b கோளை வரைபடமாக்க, ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினர். கோள் அதன் நட்சத்திரத்தின் பின்னால் செல்லும் போது, ஒளியில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களை அளவிடுகிறோம். நீர் உறிஞ்சும் ஒளி அலைநீளத்தையும், உறிஞ்சாத அலைநீளத்தையும் ஒப்பிடுவதன் மூலம், வளிமண்டலத்தின் ஆழமான அடுக்கில் உள்ள வெப்பநிலையை வரைபடமாக்குகிறோம் என்கிறார் இணை ஆசிரியர் ரியான். அதாவது, ஒரு கோளின் நிழலை வைத்து அதன் முழு 3D வரைபடத்தையே விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்!இந்த 3D வரைபடம் WASP-18b கோளின் பகல் பக்கத்தில் இதுவரை கண்டறியப்படாத விசித்திரமான அம்சங்களை வெளிப்படுத்தியது. நட்சத்திரத்தின் ஒளி நேரடியாகப் படும் மையப் பகுதியில் வட்டமான ‘வெப்பப் புள்ளி’ (Hot Spot) உள்ளது. அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சற்றே குளிர்ந்து காணப்படுகின்றன. ஒரே கோளின் வளிமண்டலத்திற்குள் இவ்வளவு அதிக வெப்பநிலை முரண்பாட்டைக் கண்டறிவது இதுவே முதல் முறை. மிக முக்கியமான விஷயம், கோளின் மிகவும் வெப்பமான பகுதிகளில் நீராவி வெகுவாகக் குறைந்துள்ளது.WASP-18b கோளின் இந்தத் துல்லியமான 3D பார்வை, வேற்று கிரகங்களின் காலநிலை மற்றும் அமைப்பு பற்றி அறிந்துகொள்ள பிரமாண்டமான பாய்ச்சலாகும். விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த வரைபடங்களை மேலும் துல்லியமாக்க நம்புகின்றனர். இந்த முறை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதால், அடுத்ததாகச் சிறிய, பாறைகள் நிறைந்த (Rocky Worlds) கிரகங்களின் மேற்பரப்பு மற்றும் காலநிலையை வரைபடமாக்கவும் இதே நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இது விண்வெளியில் உள்ள ஒவ்வொரு உலகத்தைப் பற்றியும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.
