தொழில்நுட்பம்
விண்ணில் பாய்கிறது எல்.வி.எம் 3- எம்.5 ராக்கெட்: கடற்படைக்கு வலுசேர்க்கும் அதிநவீனத் தொழில்நுட்பம்!
விண்ணில் பாய்கிறது எல்.வி.எம் 3- எம்.5 ராக்கெட்: கடற்படைக்கு வலுசேர்க்கும் அதிநவீனத் தொழில்நுட்பம்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), இந்தியக் கடற்படையின் ஜிசாட்-7ஆர் (GSAT-7R) தகவல் தொடர்பு செயற்கைக் கோளை (CMS-03) இன்று (ஞாயிற்றுக்கிழமை), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவத் திட்டமிட்டு உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் கடற்படையின் விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் டொமைன் விழிப்புணர்வு திறன்களைப் பலப்படுத்தும்.பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தச் செயற்கைக்கோள் இதுவரை இந்தியக் கடற்படைக்காக அனுப்பப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக்கோள், தற்போது வரை இந்தியாவின் மிகக் கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இதன் எடை சுமார் 4,400 கிலோகிராம். இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பல உள்நாட்டு அதிநவீனக் கூறுகளை இது கொண்டுள்ளது.ஜிசாட்-7ஆர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் வலிமையான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும். இதன் பேலோடில் (Payload) குரல், தரவு மற்றும் காணொளி இணைப்புகளைப் பல தகவல் தொடர்புப் பட்டைகள் (Communication bands) மூலம் ஆதரிக்கும் திறன் கொண்ட டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கைக்கோள் அதிக கொள்ளளவு அலைவரிசை (High-capacity bandwidth) மூலம் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். இது கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடல்சார் செயல்பாட்டு மையங்களுக்கு இடையே தடையற்ற மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு இணைப்புகளைச் செயல்படுத்தும்.சிக்கலான பாதுகாப்புச் சவால்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோள், ‘ஆத்மநிர்பரதா’ (தன்னம்பிக்கை) மூலம் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேசத்தின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கான இந்தியக் கடற்படையின் உறுதியைக் குறிக்கிறது. “சி.எம்.எஸ்-03 என்பது மல்டி-பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது இந்திய நிலப்பரப்பு உட்படப் பரந்த கடல்சார் பகுதி முழுவதும் சேவைகளை வழங்கும்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்தச் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் ராக்கெட், இந்தியாவின் மிகக் கனமான ஏவுகணையான எல்.வி.எம்.3 (LVM3) ஆகும். இது 4,000 கிலோகிராம் வரை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. சந்திரயான்-3 போன்ற நிலவுப் பயணங்களை இது வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள இந்த LVM3-M5 ஏவுதல், இதன் ஐந்தாவது செயல்பாட்டுப் பயணமாக இருக்கும்.இஸ்ரோ மேலும் கூறுகையில், “ஏவுகணையின் அனைத்துப் பகுதிகளும் முழுமையாகச் சேகரிக்கப்பட்டு, செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மேலும் ஏவுதலுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்காக அக்டோபர் 26 அன்று ஏவுதளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.இந்தியக் கடற்படைக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோள், 2013 இல் ஏவப்பட்ட ஜிசாட்-7 ருக்மணி செயற்கைக்கோளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். மேம்படுத்தப்பட்ட பேலோடுகள் மூலம், ஜிசாட்-7ஆர் கடற்படைக்கான பாதுகாப்பான, மல்டி-பேண்ட் தகவல்தொடர்புகளை விரிவுபடுத்தவும், முக்கியமான கடல்சார் களங்களில் அதன் செயல்பாட்டு வரம்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சி.எம்.எஸ்-03 பேலோடில் C, நீட்டிக்கப்பட்ட C (extended C) மற்றும் Ku பேண்டுகள் வழியாக குரல், டேட்டா மற்றும் காணொளி இணைப்புகளுக்கான டிரான்ஸ்பாண்டர்கள் அடங்கும்.
