தொழில்நுட்பம்
7 கோடி வருட பழமையான டைனோசர் முட்டை… விஞ்ஞானிகள் திகைப்பு! தொல்லுயிரியலில் புதிய சகாப்தம்!
7 கோடி வருட பழமையான டைனோசர் முட்டை… விஞ்ஞானிகள் திகைப்பு! தொல்லுயிரியலில் புதிய சகாப்தம்!
அர்ஜென்டினாவின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (CONICET), இந்த ஆண்டின் மிகவும் பரபரப்பான பல அறிவியல் முன்னேற்றங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் பயணம், ஆழ்கடல் உயிரினங்கள் குறித்த நேரடி ஒளிபரப்பாக பல மில்லியன் மக்களை ஈர்த்தது.இப்போது, அவர்கள் டைனோசர்கள் குறித்த நமது புரிதலை மாற்றக்கூடிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு டைனோசர் முட்டையை, கிட்டத்தட்ட பழுதடையாத (pristine) நிலையில் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜென்டினாவின் இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் (Argentinian Museum of Natural Sciences) தலைவரான டாக்டர். ஃபெடரிகோ அக்னோலின் (Dr. Federico Agnolin) தலைமையிலான குழுவால், அர்ஜென்டினாவின் தெற்குப் பகுதியான படகோனியாவில் (Patagonia) உள்ள ரியோ நீக்ரோ மாகாணத்தில் இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக அர்ஜென்டினாவில் வேறு சில டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த புதைபடிவம் (fossil) போல அவ்வளவு சிறந்த நிலையில் எதுவும் கண்டறியப்பட்டதில்லை.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த முட்டைக்குள் கருவின் எச்சங்கள் (embryonic remnants) இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இது உண்மையாக இருந்தால், இது தொல்லுயிரியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும். இது, டைனோசர்கள் எவ்வாறு வளர்ந்தன, முதிர்ச்சியடைந்தன, மேலும் அவற்றின் தோற்றம் பற்றிய விவரங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவக்கூடும்.உன்னிப்பாக ஆராய்ந்தபோது, இது ஒரு போனாபார்டெனைக்கஸ் (Bonapartenykus) என்ற சிறிய ஊனுண்ணி டைனோசரின் புதைபடிவ முட்டை என அடையாளம் காணப்பட்டது. இது அர்ஜென்டினாவின் தெற்குப் பகுதியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். இந்த ஊனுண்ணி டைனோசர்களின் முட்டைகள் மிகவும் மெல்லிய வெளி ஓடுகளைக் கொண்டிருப்பதால், முட்டை பொதுவாக உடையக்கூடிய தன்மையுடன் இருக்கும்; எனவே, இந்த முட்டை இவ்வளவு நேர்த்தியான நிலையில் கிடைத்துள்ளது, இந்தக் கண்டுபிடிப்பின் ஆச்சரியமான அம்சங்களில் ஒன்றாகும்.இந்த முட்டை, பிற பண்டைய ஊர்வன மற்றும் பாலூட்டிகளின் புதைபடிவ எச்சங்களால் சூழப்பட்டிருந்தது. இதனால், இந்த இடத்தை வரலாற்றுக்கு முந்தைய விலங்குகளின் “நாற்றங்கால்” (Nursery) என்று இந்தக் குழு குறிப்பிடுகிறது. எனவே, இந்த இடம் டைனோசர்கள் தங்கள் குட்டிகளை எவ்வாறு வளர்த்தன மற்றும் அவற்றின் நடத்தை குறித்த பிற அம்சங்களையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான எல் பைஸ்ஸிடம் (El Pais) அக்னோலின் இது குறித்து கூறுகையில், “மற்ற முட்டைகள் பலவும் அரிக்கப்பட்டு, சிதைந்து காணப்படுகின்றன. சில முட்டைகள் பாறைக்குள் அப்படியே இருந்தாலும் இருக்கலாம். ஆனால், இந்த முட்டை பாறையிலிருந்து வெளியேறி, அந்த மிக மெல்லிய மணலில் உருண்டு அப்படியே நின்றுவிட்டது. அது உடையாமல் இருக்க இதுவே காரணம். இது கிட்டத்தட்ட ஓர் அதிசயம். மழை பெய்திருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நடந்திருந்தாலோ அது அழிந்து போயிருக்கும். அதனால்தான் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. யாரோ வேண்டுமென்றே அங்கே வைத்தது போல இருக்கிறது. நான் அதைக் கண்டுபிடித்தபோது, இது புதைபடிவம்தான் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.”ஆராய்ச்சியாளர்கள், முட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து மக்களும் தெரிந்துகொள்ளும் விதத்தில், அதன் உள்ளடக்கத்தை ஆராயும் செயல்முறையை நேரடி ஒளிபரப்பு (broadcast) செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதன் பிறகு, இந்தப் புதைபடிவம் உள்ளூர் மக்கள் பார்க்க ஏதுவாக, படகோனியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.
