தொழில்நுட்பம்
பெங்களூரு வானில் தோன்றிய அரிய பச்சை வால்மீன்… மக்களை ஆச்சரியப்படுத்திய கண்கவர் காட்சி!
பெங்களூரு வானில் தோன்றிய அரிய பச்சை வால்மீன்… மக்களை ஆச்சரியப்படுத்திய கண்கவர் காட்சி!
சனிக்கிழமை மாலை… பெங்களூரு மக்கள் வானத்தில் அரிய காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். நகரின் மேற்கு அடிவானத்தில், மங்கலான, அழகான ஒரு பச்சை நிற ஒளிக்கீற்று தென்பட்டது. அது வேறு யாருமல்ல, நமது சூரியக் குடும்பத்தின் தொலைதூரப் பகுதியிலிருந்து வருகை தந்த ‘லெம்மன்’ வால்மீன் (C/2025 A6) தான். இந்த அரிய வானியல் விருந்தைக் காணும் வாய்ப்பு கிடைத்த பலர், உடனே அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் “நான் இன்று பெங்களூரு வானில் வால்மீனைப் பார்த்தேன்!” என்று உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.ஒரு வால்மீன் எப்படி பச்சை நிறத்தில் ஒளிர முடியும்? இது சூரிய ஒளியை சாதாரணமாகப் பிரதிபலிப்பதால் அல்ல. இந்த வால்மீனின் ‘கோமா’ (Coma) எனப்படும் அதன் மையக்கருவைச் சுற்றியுள்ள பனி மேகத்தில், ‘இருஅணு கார்பன்’ (C₂) என்ற விசேஷ வாயு உள்ளது. இந்த வாயு மீது சூரியனின் சக்திவாய்ந்த புற ஊதா கதிர்கள் படும்போது, அது ஒளிரத் தொடங்குகிறது (Fluorescence). இந்த வேதியியல் நிகழ்வுதான் அந்தக் கண்கவர் பச்சை நிறத்திற்குக் காரணம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த பச்சை நிறம் வால்மீனின் ‘தலை’ப் பகுதியில் மட்டுமே இருக்கும். வாலில் அந்த வாயு சிதைந்துவிடுவதால், வால்பகுதி பச்சை நிறமற்றதாகவே காட்சியளிக்கும்.இந்த ‘பச்சை விருந்தாளி’ மவுண்ட் லெம்மன் ஆய்வு மையத்தால் இந்த ஆண்டு (2025) ஜன.3 ஆம் தேதி தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாசா (NASA) தகவலின்படி, இந்த வால்மீன் நமது சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வேகமாகப் பயணம் செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 21-ம்தேதி நமது பூமிக்கு மிக அருகில் வந்து ‘ஹாய்’ சொல்லிவிட்டு சென்றது. இப்போது, தனது பயணத்தின் உச்சகட்டமாக, நவ.8-ம் தேதி சூரியனுக்கு மிக அருகில் கடந்து செல்லவிருக்கிறது.வால்மீன்களின் பிரகாசத்தைக் கணிப்பது கடினம் என்றாலும், இந்த ‘லெம்மன்’ வால்மீன் வெறும் கண்ணுக்கே தெரியக்கூடும் என்று நாசா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. அக்டோபர் வரை அதிகாலை வானில் தெரிந்த இந்த வால்மீன், இப்போது பெங்களூருவில் தெரிந்தது போல, மாலை நேரங்களிலும் வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கத் தொடங்கியுள்ளது.சமீபத்தில், லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள ஹான்லே கிராமத்தில், இந்திய வானியலாளர் டோர்ஜே அங்க்சுக், இந்த வால்மீன் இரவு வானை ஒளிரச் செய்த பிரமிக்க வைக்கும் காட்சியொன்றைப் படம் பிடித்தார். அது நட்சத்திர ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத வானியல் விருந்தாக அமைந்தது.
