இந்தியா
காற்று மாசுபாடு : மக்களை டெல்லியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் !
காற்று மாசுபாடு : மக்களை டெல்லியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் !
இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மோசமான நிலையில் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த வருடமும் காற்று மாசு தற்போது மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் அது பற்றிய மீள் ஆய்வுகள் நடந்து வருகின்றன. டெல்லியின் பல கண்காணிப்பு நிலையங்களில் பதிவான காற்றின் தரக் குறியீடு மோசமாக இருந்ததென மத்திய மாசு கட்டுப்பாட்டு சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நுரையீரல் மருத்துவர் கோபி சந்த் கில்னானி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நுரையீரல் மருத்துவர் கோபி சந்த் கில்னானி கூறுகையில்,
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிந்தால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுட்காலத்தை கூட குறைக்கும். குறித்த மாசுபாடு கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா, நிமோனியாவை ஏற்படுத்துகிறது. தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு ஒருபோதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது, ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும்.
ஏனெனில் பெரும்பாலான மக்கள் சுவாசிப்பதற்கு கூட சிரமப்படுகிறார்கள். நாள்பட்ட பாதிப்பில் உள்ளவர்கள் முடிந்தளவில் டிசம்பர் வரை தலைநகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகிறேன் என்றார்.
