உலகம்
கென்யாவில் மண்சரிவு ; 26 பேர் பலி!
கென்யாவில் மண்சரிவு ; 26 பேர் பலி!
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 35-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கென்யாவின் ரிப்ட் வெலி மாகாணத்தில் உள்ள மரக்வெட் மாவட்டத்தில், குறிப்பாக கிழக்கு மரக்வெட் பகுதியில் உள்ள செசோங்கோச் கிராமத்தில், கனமழை காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவால் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர். 25 பேர் படு காயமடைந்துள்ளனர். இந்த மண்சரிவில் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
தகவலறிந்து உடனடியாக விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், காயமடைந்த 25 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன 25 பேரைத் தீவிரமாகக் தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகச் வீதிகளூடான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளுக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கெலிக்கொப்டர்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கென்ய உள்நாட்டுத் துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் இது தொடர்பாக கூறுகையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும், பருவகால ஆறுகளுக்கு அருகிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்தப் பகுதிகள் கடந்த காலங்களிலும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
