தொழில்நுட்பம்
உலகை மிரட்டிய பயங்கர சுனாமிகள்… வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்! ஒரு தொகுப்பு!
உலகை மிரட்டிய பயங்கர சுனாமிகள்… வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்! ஒரு தொகுப்பு!
சுனாமி என்றதும், வானம் முட்டும் ராட்சத அலைகள் கடலோர நகரங்களைச் சுருட்டிச் செல்வதையே நாம் கற்பனை செய்வோம். ஆனால், ஓர் அலை எவ்வளவு உயரமானதோ, அந்த அளவுக்கு அது பயங்கரமான அழிவை ஏற்படுத்துமா? வரலாற்றுப் பதிவுகள் சொல்லும் பதில், ‘இல்லை’ என்பதுதான். சமீபத்தில் ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் மீண்டும் சுனாமி அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகின் மிகக் கொடூரமான ஆழிப்பேரலைகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கலாம். ஆச்சரியமூட்டும் வகையில், மிக உயரமான அலைகள் எப்போதும் மிகக் கொடிய அலைகளாக இருந்ததில்லை.மெகாசுனாமிகள் (Megatsunamis) என்பவை 100 மீட்டருக்கும் (சுமார் 330 அடி) அதிகமான அசுர அலைகள். இவை பெரும்பாலும் பூகம்பங்களால் அல்ல, மாறாகப் பெரிய நிலச்சரிவுகள் அல்லது எரிமலைச் சரிவுகளால் ஏற்படுகின்றன.லிடுயா விரிகுடா, அலாஸ்கா (1958) அலையின் உயரம்: 524 மீ.(1,719 அடி). இது உலகில் உள்ள பல வானளாவிய கட்டிடங்களை விட உயரமானது. 7.8 ரிக்டர் பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, இந்த ராட்சத அலையை உருவாக்கியது. அது தன் பாதையில் இருந்த அனைத்தையும் அழித்தது. இது மக்கள் வசிக்காத தொலைதூரப் பகுதி என்பதால், இறந்தவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே.மவுண்ட் செயின்ட் ஹெலன்ஸ், அமெரிக்கா (1980) எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு, ‘ஸ்பிரிட் லேக்’ ஏரியில் 260 மீட்டர் (850 அடி) உயர அலையை உருவாக்கியது. இது மக்கள் வசிக்காத பகுதி என்பதால், உயிரிழப்பு பூஜ்ஜியம்.வஜோன்ட் அணை, இத்தாலி (1963) மனிதப் பேரழிவுகளில் ஒன்றான இது, அணைக்கட்டு நீர்த்தேக்கத்தில் மலை சரிந்து விழுந்ததால் ஏற்பட்டது. இதனால் உருவான 250 மீ.(820 அடி) உயர அலை, அணையைக் கடந்து பாய்ந்து பல நகரங்களை மூழ்கடித்தது. 2,000 பேர் கொல்லப்பட்டனர்.மெகாசுனாமிகளை விட உயரத்தில் குறைவாக (30 முதல் 100 மீ.வரை) இருந்தாலும், கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பங்களால் உருவாகும் இந்த சுனாமிகள்தான் உண்மையான கொலையாளிகள். காரணம், இவை மக்கள் அடர்த்தி மிகுந்த கடலோரப் பகுதிகளைத் தாக்குகின்றன.இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004) வரலாற்றில் மிக அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சுனாமி இதுதான். 9.1 ரிக்டர் பூகம்பத்தால் உருவான இந்த சுனாமி அலைகளின் உயரம் சுமார் 51 மீ. (167 அடி) மட்டுமே. ஆனால், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உட்பட 14 நாடுகளைத் தாக்கியது. ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை கண்டங்கள் கடந்து, சுமார் 230,000 பேர் உயிரிழந்தனர்.டோஹோகு சுனாமி, ஜப்பான் (2011) 9.0 ரிக்டர் பூகம்பம், 130 அடி (சுமார் 40 மீ.) உயர அலைகளை உருவாக்கியது. இது புகுஷிமா அணு உலை விபத்துக்கும் காரணமானது. சுமார் 20,000 பேர் இறந்தனர். $309 பில்லியன் சேதத்துடன், இது வரலாற்றில் மிக அதிக செலவீனமிக்கப் பேரழிவாக பதிவானது.கிராக்கட்டாவ், இந்தோனேசியா (1883): எரிமலை வெடிப்பால் உருவான 150 அடி அலைகள், 36,000 பேரைக் கொன்றன.சன்ரிகு, ஜப்பான் (1896): 125 அடி உயர அலைகள், 22,000 பேரைக் கொன்றன.அரிகா, பெரு/சிலி (1868): வெறும் 70 அடி உயர அலைகள், பசிபிக் முழுவதும் பரவி 25,000 முதல் 70,000 பேரைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.சுனாமியைப் பொறுத்தவரை, அலையின் உயரம் மட்டும் அதன் அழிவைத் தீர்மானிப்பதில்லை. மாறாக, எந்த இடத்தில் தாக்குகிறது, அங்கு எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள், எச்சரிக்கை அமைப்பு உள்ளதா என்பதே பேரழிவின் அளவைத் தீர்மானிக்கிறது. 500 மீ. அலை வெறிச்சோடிய விரிகுடாவில் எழும்போது அது இயற்கை அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், 50 மீட்டர் அலை மக்கள் நிறைந்த கடற்கரையைத் தாக்கும் போது, அது வரலாற்றின் மாபெரும் துயரமாக (2.3 லட்சம் இறப்புகள்) மாறுகிறது.
