வணிகம்
ஓய்வூதியத் திட்டத்தில் புதிய விதி: விருப்ப ஓய்வு பெற 20 ஆண்டுகள் பணி, 3 மாத அறிவிப்பு கட்டாயம் – மத்திய அரசு
ஓய்வூதியத் திட்டத்தில் புதிய விதி: விருப்ப ஓய்வு பெற 20 ஆண்டுகள் பணி, 3 மாத அறிவிப்பு கட்டாயம் – மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கினைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (யு.பி.எஸ்) கீழ் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) பெறுவது தொடர்பான விதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்.பி.எஸ்) கீழ் வரும் சுமார் 23 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் யு.பி.எஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 30, 2025 ஆகும்.விருப்ப ஓய்விற்கான முக்கிய நிபந்தனைகள்மத்திய சிவில் பணியாளர்கள் (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கினைந்த ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல்) விதிகள், 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, யு.பி.எஸ்-ஐத் தேர்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு மற்றும் அதற்கான தகுதிகள் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது:குறைந்தபட்ச பணி: யு.பி.எஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் அரசுப் பணியில் 20 ஆண்டுகள் வழக்கமான சேவையை நிறைவு செய்த பின்னரே விருப்ப ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்.நோட்டீஸ் காலம்: பணியில் இருந்து ஓய்வு பெற, ஊழியர் தனது நியமன அதிகாரிக்குக் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு குறையாத எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அளிக்க வேண்டும்.ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்ட அலுவலக குறிப்பு (ஓ.எம்) என்ன சொல்கிறது? “விதி 13, என்.பி.எஸ்-ன் கீழ் யு.பி.எஸ்-ஐத் தேர்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு மற்றும் அதற்கான உரிமைகளை வழங்குகிறது. ஒரு சந்தாதாரர் இருபது ஆண்டுகள் வழக்கமான சேவையை முடித்த பிறகு, அவர் நியமன அதிகாரிக்கு மூன்று மாதங்களுக்குக் குறையாத அறிவிப்பை எழுத்துப்பூர்வமாக அளித்து, சேவையில் இருந்து ஓய்வு பெறலாம் என்று விதி கூறுகிறது.”அறிவிப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் கால அவகாசத்தைக் குறைப்பதுநியமன அதிகாரி ஏற்கவில்லை என்றால் என்ன ஆகும்?விருப்ப ஓய்விற்காக அளிக்கப்பட்ட அறிவிப்பு நியமன அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்படுவது கட்டாயமாகும். இருப்பினும், அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கால அவகாசம் முடிவடைவதற்கு முன் நியமன அதிகாரி ஓய்வு பெறுவதற்கான அனுமதியை மறுக்கவில்லை என்றால், அறிவிப்புக் காலம் முடிந்த தேதியிலிருந்து ஓய்வு தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும்.3 மாதங்களுக்குக் குறைவான நோட்டீஸ் காலத்திற்கு அனுமதி உண்டா?3 மாதங்களுக்கும் குறைவான அறிவிப்புக் காலத்தை ஏற்கக் கோரி, அதற்கான காரணங்களைத் தெரிவித்து அரசு ஊழியர் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.இந்தக் கோரிக்கையைப் பெறும் நியமன அதிகாரி, கால அவகாசத்தைக் குறைப்பது எந்த நிர்வாக அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது என்று திருப்தி அடைந்தால், 3 மாத நோட்டீஸ் கால அவசியத்தில் தளர்வு அளிக்கலாம்.ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுதல்இந்த விதியின் கீழ் ஓய்வு பெறத் தேர்வுசெய்து, அதற்கான அறிவிப்பை அளித்த அரசு ஊழியர், நியமன அதிகாரியின் குறிப்பிட்ட ஒப்புதலுடன் மட்டுமே தனது அறிவிப்பைத் திரும்பப் பெற முடியும்.ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை, அவர் ஓய்வு பெற விரும்பும் தேதிக்கு குறைந்தது பதினைந்து நாட்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அலுவலகக் குறிப்பு கூறுகிறது.இந்த விதிகள், அதிகப்படியான ஊழியர்களுக்கான சிறப்பு விருப்ப ஓய்வுத் திட்டம் அல்லது தன்னாட்சி அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் சேருவதற்காக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்குப் பொருந்தாது.விருப்ப ஓய்வுக்குப் பிந்தைய நிதிப் பலன்கள்25 ஆண்டுகள் தகுதிச் சேவையை நிறைவு செய்வதற்கு முன் விருப்ப ஓய்வு பெறும் சந்தாதாரர், விகிதாச்சார அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட ஊதியத்தைப் (pro-rata assured payout) பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.25 ஆண்டுகள் தகுதிச் சேவையை நிறைவு செய்த பிறகு விருப்ப ஓய்வு பெறும் சந்தாதாரர், முழு உறுதிப்படுத்தப்பட்ட ஊதியத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.இந்த விதிகளைச் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவற்றைக் கண்டிப்பாகச் செயல்படுத்தவும் அனைத்து அமைச்சகங்கள்/துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
