இந்தியா
திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் தேர் செய்ய முடிவு – சட்டப்பேரவையில் பணி ஆணை வழங்கிய ரங்கசாமி
திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் தேர் செய்ய முடிவு – சட்டப்பேரவையில் பணி ஆணை வழங்கிய ரங்கசாமி
புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் அமைந்துள்ள ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிதாக தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் 2 கோடியே 64 லட்சம் ரூபாயில் மதிப்பீடு தயார் செய்து முதல்வர் ரங்கசாமி மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் ஒப்புதலோடு தகுதி வாய்ந்த ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகளிடமிருந்து குறைந்த விலைப் புள்ளி ஒப்பந்தம் கோரப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட 10 ஸ்தபதிகளில் தகுதிவாய்ந்த 2 ஸ்தபதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், குறைந்த விலைப்புள்ளி குறிப்பிட்டிருந்த வரதராஜன் என்ற ஸ்தபதி தேர்வு செய்யப்பட்டார்.புதிய தேர் செய்ய தேர்வு பெற்ற ஸ்தபதிக்கு சட்டப்பேரவையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று அதற்கான பணி ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, தலைமைப் பொறியாளர் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் செல்வராசு, தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர், திருத்தேர் திருப்பணிக் குழுவினர், திருக்கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
