இலங்கை
ஒரு வருட விசாரணையின் பின்னர் கழிவறை குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம்
ஒரு வருட விசாரணையின் பின்னர் கழிவறை குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம்
கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் இன்று (08) மீட்டுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இந்துருகல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை கடந்த 2024.09.08 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் போனமை குறித்து உயிரிழந்தவரின் சகோதரரால் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சுமார் ஒரு வருட விசாரணையின் பின்னர் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் நேற்று (06) மூன்று நபர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கொலையின் பின்னணி அம்பலமானது.
கொலை செய்யப்பட்ட நபரும் கைது செய்யப்பட்ட இந்த மூவரும் ஒன்றாகச் சேர்ந்து மது விருந்து நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்தக் கொலை இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரைத் தடியால் தாக்கி, பின்னர் சடலத்தைக் கழிவறை குழியினுள் போட்டு மூடியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.
