இந்தியா
சுகாதாரத்துறை தொடர்பில் இந்தியாவிடம் உதவி கோரிய சஜித்!
சுகாதாரத்துறை தொடர்பில் இந்தியாவிடம் உதவி கோரிய சஜித்!
இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்குத் தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் இன்னுமொரு நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய சுகாதார கட்டமைப்பினூடாக பல தசாப்த காலமாக இலவச சுகாதார வசதிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் பல மருந்துகளின் பற்றாக்குறை, அவற்றைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
ஒரு சில மருந்துகள் தனியார் துறையினூடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரச மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் அந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தியா வழங்கும் அந்த ஒத்துழைப்பை மரியாதையுடன் வரவேற்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் இலங்கையின் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு கடந்த காலத்தில் வழங்கிய பங்களிப்பிற்கு சஜித் பிரேமதாஸ நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்ட ‘1990 – சுவ செரிய’ அம்புலன்ஸ் சேவையை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்தச் சேவையை அறிமுகம் செய்ததினூடாக நாடு முழுவதும் அவசர மருத்துவ பதிலளிப்பு கட்டமைப்பு வலுவடைந்ததாகவும்,அது “உயிர் காக்கும் கூட்டாண்மை” என விவரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவது, ஔடத ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது மற்றும் அனைவருக்கும் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியம் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் விரிவாகக் கலந்துரையாடினர்.
