இந்தியா
புனே நில சர்ச்சை: தாவரவியல் பூங்கா டூ ஐடி பார்க்… அஜித் பவார் மகன் வாங்கிய நிலம் அரசுக்குச் சொந்தமானது
புனே நில சர்ச்சை: தாவரவியல் பூங்கா டூ ஐடி பார்க்… அஜித் பவார் மகன் வாங்கிய நிலம் அரசுக்குச் சொந்தமானது
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சர்ச்சைக்குள்ளான 40 ஏக்கர் நில விற்பனை தொடர்பான முறைகேடு புகாரில், அந்நிலம் மாநில அரசுக்குச் சொந்தமானது என்றும், அதை எந்தச் சூழலிலும் விற்க முடியாது என்றும் மகாராஷ்டிர மாநில இணைப் பதிவுத்துறைத் தலைவர் ராஜேந்திர முத்தே தெரிவித்தார்.புனேயைச் சேர்ந்த அதிகாரப் பத்திரம் பெற்றவரான (Power of Attorney) ஷீத்தல் தேஜ்வானி, மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்-திக்விஜய் பாட்டீல் ஆகியோருக்குச் சொந்தமான கூட்டாண்மை நிறுவனத்திற்கு (LLP) நிலத்தை விற்றது குறித்து, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்த விசாரணைக் குழுவுக்கு முத்தே உதவி வருகிறார்.”7/12 ஆவணம் (நில உரிமை ஆவணம்) ‘மும்பை சர்க்கார்’ (முந்தைய பம்பாய் அரசு) என்பதை உரிமையாளராகக் காட்டியது. 2018-க்குப் பிறகு வழங்கப்பட்ட சொத்து அட்டையிலும் (Property Card) அதுவே உள்ளது. அதிகாரப் பத்திரம் வைத்திருப்பவர் இந்த நிலத்தை எந்த விலையிலும் விற்க முடியாது. நாங்க அனைத்தையும் விசாரித்து வருகிறோம், 7 நாட்களில் மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம்” என்று முத்தே ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார். சொத்துப் பத்திரங்களைப் பதிவு செய்வதும், முத்திரைத் தீர்வையை வசூலிப்பதும் இவரது அலுவலகத்தின் பொறுப்பாகும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த 40 ஏக்கர் நிலம், மஹர் சமூகத்தைச் சேர்ந்த 272 அசல் உரிமையாளர்களின் ‘வத்தன்’ நிலமாகும். (சுதந்திரத்திற்கு முன்பு, கிராமங்களில் சில சேவைகளுக்குப் பணத்திற்குப் பதிலாக நிலம் அல்லது வருவாய் உரிமைகள் குறிப்பிட்ட சாதிகள் அல்லது குடும்பங்களுக்கு வழங்கும் ‘வத்தன்’ முறை நடைமுறையில் இருந்தது). இந்த 272 பேரின் சார்பாக ஷீத்தல் தேஜ்வானி அதிகாரப் பத்திரம் பெற்றிருந்தார்.பவார்-பாட்டீல் கூட்டாண்மையான ‘அமேடியா எண்டர்பிரைசஸ் எல்எல்பி’ நிறுவனம், புனே மாவட்டத் தொழில்கள் மையத்திடம் (DIC) இருந்து ஏப்.24, 2024 அன்று ‘விருப்பக் கடிதம்’ (Letter of Intent – LoI) பெற்றது. அதைப் பெற்ற 13 மாதங்களுக்குள், மே 19, 2025 அன்று, தேஜ்வானியுடன் ரூ. 300 கோடிக்கு விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளது.ஏப்.22, 2024 அன்று, அமேடியா நிறுவனம், ஐடி பூங்கா அமைப்பதற்காக பார்த் பவார் மற்றும் திக்விஜய் பாட்டீல் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை புனே மாவட்டத் தொழில்கள் மையத்தில் சமர்ப்பித்தது. விண்ணப்பித்த 2 நாட்களில், ஏப்.24 அன்று ‘விருப்பக் கடிதம்’ வழங்கப்பட்டது. இந்த விருப்ப கடிதத்தைப் பயன்படுத்தி, நிறுவனம் முத்திரைத் தீர்வை விலக்கு கோரி, விற்பனைப் பத்திரத்தை முடித்துள்ளது.மாநிலத்தில் புதிய தரவு மையங்களை (Data Centres) அமைக்க நிலம் வாங்குவதற்கு 100% முத்திரைத் தீர்வை தள்ளுபடி வழங்கும் கொள்கையை, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா-பாஜக அரசு மே 2023-ல் அங்கீகரித்தது. அஜித் பவார் இந்தக் கூட்டணியில் சேர்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இது நடந்தது.சர்ச்சைக்குரிய இந்த நிலம் தற்போது, நாட்டின் தாவரவியல் பன்முகத்தன்மையைப் ஆவணப்படுத்தும் மத்திய அரசு அமைப்பான ‘இந்திய தாவரவியல் ஆய்வு மையத்திற்கு’ (Botanical Survey of India – BSI) குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஆண்டு தாவரவியல் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டது.இந்திய தாவரவியல் ஆய்வு மைய குத்தகை 2038-ல் தான் முடிவடைகிறது, அப்போது நிலம் அதன் உரிமையாளரிடம் திருப்பித் தரப்பட வேண்டும். 1955-ல், வரிகள் செலுத்தப்படாததால் இந்த 43.26 ஏக்கர் ‘வத்தன்’ நிலம் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு, தாவரவியல் பூங்காவுக்காக இந்திய தாவரவியல் ஆய்வு மையத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.2038-க்குப் பிறகு குத்தகை நீட்டிப்பு என்பது, நிலத்தை அதன் அசல் உரிமையாளர்களுக்கு ‘மறுஒப்படைப்பு’ (Regrant) செய்வதற்கு உட்பட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தேஜ்வானி, இந்நிலம் தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளுக்கும், மறுஒப்படைப்புக்கு விண்ணப்பிப்பது உட்பட, அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.இதுகுறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை கூறுகையில், “இந்த நில ஒப்பந்தத்தை (Land Deal) ரத்து செய்வதாக அஜித் பவார் அறிவித்தாலும், மஹர் வத்தன் நில ஒப்பந்தம் தொடர்பான கிரிமினல் வழக்கு தொடரும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி, நில ஒப்பந்தம் முடிந்துவிட்டது.ஆனால் பணப்பரிவர்த்தனை நிலுவையில் இருந்தது. பத்திரப்பதிவு முடிந்துவிட்டது. இரு தரப்பினரும் இப்போது பத்திரப்பதிவை ரத்து செய்ய விண்ணப்பித்துள்ளனர். விதிகளின்படி, பதிவை ரத்து செய்ய வேண்டுமானாலும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்படி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கூடுதல் தலைமைச் செயலர் தலைமையிலான குழு 1 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், இதில் மேலும் பலர் ஈடுபட்டு உள்ளனரா என்பது கண்டறியப்படும். காவல்துறை ஏற்கனவே இருவரைக் கைது செய்துள்ளது. விசாரணை தொடரும், யாரும் தப்ப முடியாது என்றார்.குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த துணை முதல்வர் அஜித் பவார், “இந்நில ஒப்பந்தத்தில் ஒரு பைசா கூட பரிமாற்றம் செய்யப்படவில்லை. விற்பனைப் பத்திரம் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. கூடுதல் தலைமைச் செயலர் விகாஸ் கர்கே தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, முறைகேடுகள் குறித்து விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். அரசியல் அழுத்தமின்றி அக்குழு வெளிப்படையான முறையில் செயல்படும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
