வணிகம்
’20 வருட ஹோம் லோன் 14 வருடத்தில் முடிக்கலாம்’… வட்டியில் ரூ.19 லட்சத்தை சேமிப்பது எப்படி? நிபுணர் சொல்லும் ஸ்மார்ட் ட்ரிக்!
’20 வருட ஹோம் லோன் 14 வருடத்தில் முடிக்கலாம்’… வட்டியில் ரூ.19 லட்சத்தை சேமிப்பது எப்படி? நிபுணர் சொல்லும் ஸ்மார்ட் ட்ரிக்!
கனவு இல்லம் வாங்குவதற்கு “ஹோம் லோன்” வரம் என்றாலும், அடுத்த 20 வருடத்திற்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டுமே… வட்டியாக மட்டுமே பல லட்சங்கள் போகிறதே… என்ற கவலை நம் எல்லோருக்குமே இருக்கும். ஆனால், உங்க இ.எம்.ஐ-யை வேகமாக முடித்து, லட்சக்கணக்கான ரூபாய் வட்டியையும் சேமிக்க ஒரு ‘ஸ்மார்ட் ட்ரிக்’ இருப்பதாகச் சொல்கிறார் TaxBuddy.com நிறுவனர் சுஜித் பங்கர். பலரும் அறியாத ‘ஹோம் லோன் ஓவர் டிராஃப்ட் (Home Loan Over Draft)’ என்ற கடன் வசதி பற்றியும், அது எப்படி உங்களின் அனைத்து நிதி வலிகளையும் குறைக்கும் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.சாதாரண கடன் vs ஓவர் டிராஃப்ட் கடன்: யார் புத்திசாலி?இதைப்புரிந்துகொள்ள, சுஜித் பங்கர் எளிய உதாரணத்தைக் கூறுகிறார். ரமேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் ஒரே அளவு கடன் வாங்குகிறார்கள்.ரமேஷ் (சாதாரண கடன் வாங்கியவர்):கடன்: ரூ.60 லட்சம் (வட்டி 8.5%).சேமிப்பு: ரூ.8 லட்சம் (சேமிப்புக் கணக்கில் உள்ளது, வட்டி 2.5%, ஆண்டு வருமானம் ரூ.20,000). இவர் தனது முழு ரூ.60 லட்சத்திற்கும் தினமும் வட்டி கட்டுகிறார். கடன் முடியும் காலம் 20 ஆண்டுகள், மொத்தம் கட்டும் வட்டி ரூ.64.96 லட்சம்.சுரேஷ் (ஸ்மார்ட் – ஹோம் லோன் ஓவர் டிராஃப்ட் வாங்கியவர்):கடன்: ரூ.60 லட்சம் (வட்டி அதிகம் – 9%).சேமிப்பு: ரூ.8 லட்சம்.தந்திரம்: இவர் இந்த ரூ.8 லட்சத்தை, தனது வீட்டுக் கடனுடன் இணைக்கப்பட்ட ‘ஓவர் டிராஃப்ட்’ (OD) கணக்கில் போட்டு வைக்கிறார். இப்போது, இவர் ரூ.52 லட்சத்திற்கு (ரூ.60 லட்சம் – ரூ.8 லட்சம்) மட்டும் வட்டி கட்டினால் போதும். கடன் முடியும் காலம் 172 மாதங்கள் (சுமார் 14.3 ஆண்டுகள்). மொத்தம் கட்டும் வட்டி ரூ.45.71 லட்சம்.சுரேஷ், ஒரு ரூபாய் கூட அதிகமாகச் செலுத்தாமலேயே, தனது கடனை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டார். அத்துடன், வட்டியில் மட்டும் ரூ.19.25 லட்சத்தை சேமித்துவிட்டார்.’ஓவர் டிராஃப்ட்’ மேஜிக் எப்படி வேலை செய்கிறது?இது சாதாரண வீட்டுக் கடன் போலத்தான். ஆனால், அதனுடன் ஒரு ‘ஓவர் டிராஃப்ட்’ கணக்கு இணைக்கப்பட்டிருக்கும். உங்க கையில் இருக்கும் உபரிப் பணத்தை (உங்கள் சேமிப்பு, போனஸ், மாதச் சம்பளத்தின் மீதி) இந்த OD கணக்கில் போட்டு வைக்கலாம். நீங்க ஓ.டி கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறீர்களோ, அந்தத் தொகை உங்க அசல் கடனிலிருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டுமே வங்கி வட்டி வசூலிக்கும். (வட்டி = மொத்த கடன் – OD கணக்கு இருப்பு)பணம் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் (Liquidity), இதுதான் சூப்பர் நன்மை. ஓ.டி. கணக்கில் நீங்க போட்ட பணத்தை, ஒரு சேமிப்புக் கணக்கிலிருந்து எடுப்பது போலவே, உங்களுக்குத் தேவைப்படும்போது (அவசரச் செலவு, மருத்துவச் செலவு) திரும்ப எடுத்துக் கொள்ளலாம். உங்க இ.எம்.ஐ. வழக்கம் போல் தொடரும்.ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்?சாதாரண சேமிப்புக் கணக்கில் (ரமேஷ்) உங்க ரூ.8 லட்சம், 2.5% வட்டி மட்டுமே சம்பாதித்தது. ஆனால், ‘ஓவர் டிராஃப்ட்’ கணக்கில் (சுரேஷ்) நீங்க போட்ட ரூ.8 லட்சம், உங்க கடன் வட்டியான 9%-ஐ மிச்சப்படுத்துகிறது. அதாவது, உங்க பணம் உங்களுக்காக 9% திறம்படச் சம்பாதிக்கிறது. இந்த வித்தியாசத் தொகை (ஆண்டுக்கு சுமார் ரூ.52,000), உங்க அசலைக் வேகமாக் குறைப்பதால், உங்க கடன் காலமும் சரசரவெனக் குறைகிறது, வட்டியும் லட்சக்கணக்கில் மிச்சமாகிறது. இந்த ‘சூப்பர் சேவர்’ (OD) கடன்களுக்கு வட்டி விகிதம் 0.25% முதல் 0.5% வரை அதிகமாக இருக்கலாம். ஆனாலும், அந்தச் சிறிய வட்டி உயர்வை விட, உங்க அசல் தொகையைக் குறைப்பதால் கிடைக்கும் பலன் பன்மடங்கு அதிகம் என்கிறார் சுஜித் பங்கர்.
