தொழில்நுட்பம்
99.99% துல்லியம்.. உலகின் மிகவும் தனித்துவமான குவாண்டம் கணினி ‘ஹீலியோஸ்’ அறிமுகம்!
99.99% துல்லியம்.. உலகின் மிகவும் தனித்துவமான குவாண்டம் கணினி ‘ஹீலியோஸ்’ அறிமுகம்!
கம்ப்யூட்டர் உலகின் அடுத்தகட்ட பாய்ச்சல் ‘குவாண்டம் கம்ப்யூட்டிங்’. ஆனால், அதில் இருக்கும் மிகப்பெரிய சவால், கணக்கீடுகளில் ஏற்படும் ‘பிழைகள்’ (Errors). இப்போது, குவான்டினியம் (Quantinuum) என்ற நிறுவனம், “இதுவரை நாங்க உருவாக்கியதிலேயே மிகவும் துல்லியமானது” என்ற மார்தட்டலுடன் ‘ஹீலியோஸ்’ (Helios) என்ற புதிய குவாண்டம் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குவாண்டம் துல்லியத்தில் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது. இதில் 50 பிழைகளைக் கண்டறியும் லாஜிக்கல் க்யூபிட்களும், 98 முழுமையாக இணைக்கப்பட்ட ஃபிசிக்கல் க்யூபிட்களும் உள்ளன.அப்படி என்ன ஸ்பெஷல்? எப்படி இது வேலை செய்கிறது?ஹீலியோஸ், ‘அணு பேரியம் அயன்’ (atomic barium ion) க்யூபிட்களைப் பயன்படுத்தி இயங்குகிறது. இதன் துல்லியத் திறனே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒற்றை க்யூபிட் செயல்பாட்டில் 99.9975% துல்லியத்தையும், 2 க்யூபிட் செயல்பாட்டில் 99.921% துல்லியத்தையும் இது எட்டுகிறது. இது கணக்கு போடுவது மட்டுமல்ல, கணக்கு போடும்போதே ஏற்படும் தவறுகளை நிகழ்நேரத்தில் (Real-time) சரிசெய்கிறது. இதற்கு சக்திவாய்ந்த NVIDIA GPU-க்களின் உதவியை எடுத்துக்கொள்கிறது. இதனால், கணக்கீடு தாமதமாவது பெருமளவு குறைகிறது. ஆச்சரியமாக, இது 40kW க்கும் குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.இது உங்க வீட்டு கம்ப்யூட்டர் இல்ல!”அப்படியானால், இதை என் வீட்டு டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்தலாமா?” என்று கேட்டால், நிச்சயமாக இல்லை! இது நமக்கான சாதனம் அல்ல. இது பொருள் அறிவியல் (Materials Science), செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி, அல்லது நிதித்துறையில் (Finance) உள்ள மாபெரும் சவால்களுக்குத் தீர்வு காணப் போராடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள், குவான்டினியத்தின் ‘கிளவுட்’ சேவை மூலமாக இந்த ஹீலியோஸின் சக்தியை அணுகி, தங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஹீலியோஸை தனித்துவமாக்குவது எது?ஹீலியோஸ் 2 முக்கிய காரணங்களுக்காகத் தனித்து நிற்கிறது. திறமையான பிழைத் திருத்தம்: இது ‘கோட்கன்கேட்டனேஷன்’ (code concatenation) என்ற மிகத் திறமையான பிழைத் திருத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.முழுமையான இணைப்பு (Fully Connected): இதன் ‘அயன்-ட்ராப்’ வடிவமைப்பு ஒரு சூப்பர் ஸ்டார் போல! இதில் உள்ள எந்த ஒரு க்யூபிட்டும், மற்ற எந்த க்யூபிட்டுடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். இது, எதிர்காலத்தில் இன்னும் சக்திவாய்ந்த குவாண்டம் கம்ப்யூட்டர்களை உருவாக்க மிகவும் அவசியமான ஒன்றாகும்.
