பொழுதுபோக்கு
‘கண்ணு போட்ட மாடு கூட நீ வாழ வேண்டி இருக்கும்’: சிவகுமாருக்கு பிரபல நடிகை கூறிய கல்யாண ஜோதிடம்
‘கண்ணு போட்ட மாடு கூட நீ வாழ வேண்டி இருக்கும்’: சிவகுமாருக்கு பிரபல நடிகை கூறிய கல்யாண ஜோதிடம்
நடிகர் சிவகுமார், தமிழ் திரையுலகில் தன் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட ஒரு சிறப்புப் பேட்டியில், தனது திருமண வாழ்க்கை குறித்து பிரபல நடிகை ஒருவர் சொன்ன ஆச்சரியமான ஜோதிடக் குறிப்பை இண்டியக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் அவர் விவரித்தார். நடிகர் சிவகுமார், பிரபல நடிகை பி. பானுமதி அவர்களைப் பற்றி பேசுகையில், அவர் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தனித்துவமான ஆளுமை எனப் புகழாரம் சூட்டினார். அவர் வெறும் கதாநாயகி மட்டுமல்ல, கதை எழுதுபவர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடகி, இயக்குநர், தயாரிப்பாளர், ஓவியர் மற்றும் ஜோதிடரும்கூட என்றார். மேலும் இவர் நாடோடி மன்னன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அம்பிகாபதி உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார். 1973 அல்லது 1974 ஆம் ஆண்டு காலகட்டத்தில், நடிகை பானுமதி அவர்களைச் சந்தித்த சிவகுமார், தனது ஜாதகத்தைக் கொடுத்து, “அம்மா, எனக்கு எப்போது திருமணம் ஆகும்?” என்று கேட்டுள்ளார். ஜாதகத்தைப் பார்த்த பானுமதி அவர்கள், “உனக்கு செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் ஆகிறது. அப்படி இல்லையென்றால், ‘கண்ணு போட்ட மாடு’ கூட நீ வாழ வேண்டி இருக்கும்!” என்று கூறி, சிவகுமாரை அதிர வைத்துள்ளார்.அந்த வார்த்தையின் பொருள் புரியாத சிவகுமார், “கண்ணு போட்ட மாடு என்றால் என்ன, அம்மா?” என்று வினவ, பானுமதி அளித்த விளக்கம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “கண்ணு போட்ட மாடு என்றால், ஏற்கனவே கல்யாணமாகி, ஒரு குழந்தையை பெத்துட்டு பிரிந்தவளோடுதான் நீ வாழ வேண்டி இருக்கும். உனக்கு முறையான கல்யாணம் செய்ய வாய்ப்பில்லை”. இந்தச் சாபத்தைக் கேட்டு பதறிப்போன சிவகுமார், “அப்படிச் சபித்து விடாதீர்கள்மா!” என்று வேண்டிக்கொண்டார்.நடிகை பானுமதி செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் என்று கணித்திருந்த நிலையில், அதற்கு முன்பாகவே, அதாவது ஜூலை 1ஆம் தேதி சிவகுமாருக்கு திருமணம் முடிந்தது. இதன்மூலம், அந்த ‘கண்ணு போட்ட மாடு’ என்ற பயங்கரமான ஜோதிடக் கணிப்பை அவர் தவிர்த்ததாக, இந்தப் பேட்டியில் சிவகுமார் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
