Connect with us

இலங்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை!

Published

on

Loading

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை!

பருத்தித்துறைக்கு கிழக்கில் 377 கி.மீ. கிழக்காக இன்றைய தினம் வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், 

Advertisement

இந்த காற்றுச் சுழற்சி எங்களுக்கு மழை கிடைக்க கடவுள் உருவாக்கிய காற்றுச் சுழற்சியாகவே கருதுகின்றேன். ஏனெனில் இக்காற்றுச் சுழற்சி வலுவிழக்க செய்யும் பல காரணிகள் வங்காள விரிகுடாவில் உள்ளன.  குறிப்பாக இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் எதிர்மறையாக உள்ளமை இதற்கு பெரும் பலவீனமாகும். 

குறித்த சுழற்சி  எதிர்வரும் 18ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக குமரிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் எதிர்வரும் 19ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது புயலாக மாறி தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத்  தாழமுக்கத்தின் விருத்தி, கரையைக் கடக்கும் இடம் என்பனவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும். 

இத்தாழமுக்கமும் உருவாக்குவதற்கான ஏது நிலைகள் குறிப்பாக மேடன் ஜூலியன் அலைவு, இந்து சமுத்திர வெப்பச் சுட்டெணின் நேர்மறைத் தன்மை போன்றவை சாதகமில்லாத நிலையிலும் இந்த தாழமுக்கம் றொஸ்பி அலைகளின் செல்வாக்கினால் உருவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

இதனால் நாளை 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் பலத்த  மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.  இவ்வாண்டுக்கான வடகீழ்ப் பருவமழை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அதிகரிப்பதோடு தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 27 ஆம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை தொடரும். 

கடந்த பல வருடங்களாக நவம்பர் 25,26,27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கன மழையைப் பெறுவதுண்டு. இவ்வருடமும் அது தொடரும். 

அண்மித்த காலங்களில் பல புயல்கள் பல பிரதேசங்களில் நிகழ்ந்து அந்த பிரதேசங்கள் பல்வேறு வகையான அழிவுகளை சந்தித்து வருகின்றன. உதாரணமாக இன்றைய தினம் வட மேற்கு பசிபிக்கில் உள்ள ஃபங்-வோங்  பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை தாக்கிய கல்மேகி கரீபியன் தீவுகளைத் தாக்கிய மெலிசா போன்றவற்றை குறிப்பிடலாம். ஆகவே அத்தகைய புயல்கள் தோன்றாமல் தனித்து எங்களுக்கு மழை கிடைத்தால் போதும். 

Advertisement

மேலும் அவர் ஒரு பதிவில் தெரிவிக்கையில் காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பல வியக்கத்தக்க ஆச்சரியங்களையும், விரும்பத்தகாத மாற்றங்களையும் எங்கள் பிரதேசங்களின் வானிலைக் கோலங்களில் ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன