இந்தியா
4 ஆண்டு மசோதா தாமதம்- மாநில அரசுகள் தவறான தகவல்களை பரப்புவதாக எப்படி கூற முடியும்? ஆளுநர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்
4 ஆண்டு மசோதா தாமதம்- மாநில அரசுகள் தவறான தகவல்களை பரப்புவதாக எப்படி கூற முடியும்? ஆளுநர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்பு அல்ல. ஆனால், சில மசோதாக்கள் நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போது, மாநில அரசுகள் தவறான தகவல்களை கொடுக்கின்றன என்று எப்படி சொல்ல முடியும் என உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அன்று கேள்வி எழுப்பியுள்ளது.அரசுக்கு ஆதரவாக வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசனம் என்பது, சில விஷயங்களில் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் விதமாக இயங்க வேண்டும். ஆனால் தற்போது தேவையற்ற ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.” என்று வாதிட்டார்.இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “ஆளுநரிடம் மசோதாக்கள் நான்கு வருடங்களாக நிலுவையில் இருக்கும்போது, நீங்கள் எப்படி மாநில அரசுகள் தவறான தகவலை தருகிறது என்று கூற முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.மாநில சட்ட மசோதாக்களை ஆளுநரும், குடியரசுத் தலைவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஏப்ரல் 12 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பரிந்துரையை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இது.மாநில அரசுகள் தவறான தகவல்களை கொடுக்கின்றன என்ற சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்திற்கு நீதிபதி நரசிம்மா, “ஆளுநரிடம் மசோதாவை அனுப்பியவுடன், அதை அவர் உடனடியாக நிறுத்தி வைப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல” என்றார்.துஷார் மேத்தா, “ஆளுநர், மாநில அமைச்சரவையுடன் கலந்து ஆலோசித்து, பேச வேண்டும். சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சரை தேநீர் விருந்துக்கு அழைப்பார். இப்படித்தான் அரசியல் சாசனம் செயல்படுகிறது. இப்பொழுது, இது குறித்து தேவையற்ற ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது” என்றார்.தலைமை நீதிபதியின் கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல், “மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அதற்கான ஒரு சரியான, நேரடியான விதிமுறையை வகுக்க முடியாது. இதில் அரசியல் பேச்சுவார்த்தை, விவாதம் மற்றும் தீர்வுகள் ஆகியவை அடங்கியுள்ளது.” என்றார்.மேலும், “ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்பு அல்ல. அரசியல் சாசனத்தில், எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாதபோது, ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற வாதம், ஆளுநர் பதவியை, எந்த பங்களிப்பும், ஆலோசனையும் இல்லாத ஒரு ஊமையாக மாற்றும்.” என்றார்.”ஆளுநரின் பங்கு, வெறும் ஊமை பார்வையாளராகவும், ரப்பர் ஸ்டாம்பாகவும் இருந்தால், அது ஆளுநர் பதவியின் அடிப்படை நிலையை மீறுவதோடு, அரசியல் சாசனத்தின் 159-வது பிரிவின் கீழ், அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும் அமையும்” என்று மேத்தா மேலும் கூறினார்.”ஒருவேளை, ஆளுநரின் பங்கு கட்டுப்படுத்தப்பட்டால், அவர் அரசியல் சாசனத்தை பாதுகாக்க, பராமரிக்க மற்றும் பாதுகாக்கும் கடமையை செய்ய, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒரு மசோதா மத்திய சட்டத்திற்கு எதிரானது அல்லது அரசமைப்புக்கு எதிரானது என்றால் கூட, அவர் ஒப்புதலை நிறுத்தி வைக்கும் கடமையை இழந்து விடுவார்.” என்று சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் அரசியல் சாசனத்தை திருத்த முடியாது என்ற வாதத்திற்கு, அடிப்படை கட்டமைப்பு என்பது, நீதித்துறையின் தலையீட்டின் காரணமாகவே வந்தது என்பதை தலைமை நீதிபதி நினைவூட்டினார்.”ஆளுநர் வெறும் கையெழுத்து போடுபவர், அவரால் தனியாக எதுவும் செய்ய முடியாது என, அவர்கள் ஒரு தீவிரமான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில், ஒருமித்த ஒத்துழைப்பு மற்றும் கலந்தாய்வு இருக்க வேண்டும் என்றும் வாதிடுகிறார்கள். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றால், என்ன ஒத்துழைப்பு, என்ன கலந்தாய்வு இருக்கும்? அதனால்தான், இதில் சமநிலை வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.” என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
