வணிகம்
புதிய ஐ.ஆர்.சி.டி.சி. ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள்: அக். 1 முதல் ஆதார் கட்டாயம்
புதிய ஐ.ஆர்.சி.டி.சி. ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள்: அக். 1 முதல் ஆதார் கட்டாயம்
இந்திய ரயில்வேயின் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அக்டோபர் 1, 2025 முதல், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை புக் செய்யும் பயணிகளுக்கு, முன்பதிவு திறக்கப்பட்ட முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதி, முறைகேடுகளைத் தடுப்பதையும், உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ரயில்வே கம்ப்யூட்டரைஸ் செய்யப்பட்ட பிஆர்எஸ் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மாறாமல் தொடரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அங்கீகரிக்கப்பட்ட ரயில் டிக்கெட் ஏஜென்ட்களுக்கான தற்போதைய 10 நிமிட கட்டுப்பாடு, முன்பதிவு தொடங்கும் நேரத்தில் தொடரும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே ஆதார் கட்டாயம்இந்த புதிய விதி, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கிய சில மாதங்களுக்குப் பிறகு அமலுக்கு வருகிறது. ஜூலை 1, 2025 முதல், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் தங்கள் ஆதார் விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.மேலும், தட்கல் முன்பதிவுக்கான குறிப்பிட்ட நேர வரம்புகளும் ரயில்வே ஏஜென்ட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. ஏசி வகுப்புகளுக்கு காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் முதல் நாள் தட்கல் டிக்கெட்டுகளை ஏஜென்ட்கள் புக் செய்ய முடியாது என்றும் அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
